1000 வழக்குகளை சமாளிப்பவன் நான்

Written by vinni   // October 17, 2013   //

angry-vijayakanth1000 வழக்குகள் வந்தாலும் சமாளிப்பேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆவேசமாக கூறியுள்ளார்.
தேமுதிக சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏழை இஸ்லாமிய மக்களுக்கு குர்பானி வழங்கும் நிகழ்ச்சி கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவிற்கு அவைத்தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன் வரவேற்றார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் விழாவிற்கு தலைமை தாங்கி 1,000 பேருக்கு குர்பானி வழங்கினார்.

அதன்பின் விஜயகாந்த் பேசுகையில், கோபம் என்பது இயற்கை. ஆனால் ஒழுங்காக பேசுகிறோம் என்று தமிழகத்தில் 2 கட்சிகள் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்.

எந்த இடத்திலும் எனது மனதில் படுவதை பேசுபவன் நான். அவ்வாறு பேசினால் குடித்து விட்டு பேசுகிறேன் என்கிறார்கள். அவ்வாறு பேசுபவர்கள், என் பக்கத்தில் இருந்து ஊற்றி கொடுத்தார்களா என்பதை சிந்தித்து பேச வேண்டும்.

கோபப்படுபவன் நான் அல்ல. மாறாக முதல்வர் தான் கோபப்படுகிறார். அவ்வாறு இருப்பதால்தான் அடிக்கடி அமைச்சர்களை மாற்றி கொண்டு இருக்கிறார்.

மேலும் என் மீது ஆயிரம் வழக்கு தொடர்ந்தாலும் கவலைப்பட மாட்டேன். மதுரை கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்ட பி.ஆர்.பழனிச்சாமி மீது அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட வி.வி. மினரல் அதிபர் வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குகிறது.

பி.ஆர்.பழனிச்சாமிக்கு ஒரு நியாயம். வைகுண்டராஜனுக்கு ஒரு நியாயமா? இதில் இருந்து தமிழக அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பது தெளிவாகுகிறது.

அவ்வாறு மக்களை ஏமாற்றுபவர்களுக்கு தேர்தல் நேரத்தில் மக்கள் தகுந்த பதில் அடி கொடுப்பார்கள். சென்னையில் வழி நெடுகிலும் குப்பை மற்றும் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது.

எனது கட்சி அலுவலகத்திற்கு அருகிலேயே கழிவு நீர் தேங்கியபடி உள்ளது என்றும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க கூடாது எனவும் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.