மன்மோகனுக்கு பதிலாக காமன்வெல்த் மாநாட்டில் அன்சாரி,குர்ஷித்

Written by vinni   // October 17, 2013   //

Commonwealthதமிழகத்தில் ஏற்பட்டுள்ள பலத்த எதிர்ப்புகளை தொடர்ந்து, இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கு பதிலாக துணை ஜனாதிபதி அன்சாரி, அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் நடந்த உச்ச கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி, இலங்கை மீது சர்வதேச போர் குற்ற விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தன. ஐ.நா மனித உரிமை அமைப்பும் இலங்கையை கண்டித்தது.

இந்நிலையில் நவம்பர் 10ம் திகதி, இலங்கையில் காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பிரதமருக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி இருந்தார். அதற்கு கடந்த 14ம் திகதி கருணாநிதிக்கு மன்மோகன் சிங் பதில் கடிதம் ஒன்று அனுப்பினார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மூலம் அனுப்பிய அந்த கடிதத்தில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும்.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து எல்லா முக்கிய விஷயங்களையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதையடுத்து அந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள மாட்டார்.

அவருக்கு பதிலாக துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கேற்ப கடந்த 2011ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் துணை ஜனாதிபதி அன்சாரிதான் பங்கேற்றார்.

தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளதால், கடந்த முறையை போலவே இந்த முறையும் மாநாட்டில் துணை ஜனாதிபதி பங்கேற்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.


Similar posts

Comments are closed.