இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்

Written by vinni   // October 15, 2013   //

fishing boat_CIபுதுக்கோட்டை மீனவர்கள் 15 பேர் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 700 விசைப்படகு மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் அனைவரும் இன்று காலை 7 மணிக்கு கரை திரும்பியிருக்க வேண்டும். மற்ற படகுகள் கரைக்கு வந்துசேர்ந்த நிலையில் 4 படகுகள் மட்டும் இன்னும் கரை திரும்பவில்லை.

இதற்கிடையே மாயமான படகுகளில் இருந்த 15 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் கிடைத்தது. ஜெகதாபட்டினத்தை சேர்ந்த தேசிங்குராஜா என்பருக்கு சொந்தமான படகில் அவர் மற்றும் சதீஷ், சண்முகம், ஆறுமுகம், செல்வராஜ் ஆகி யோரும் மற்ற படகுகளில் 11 பேரும் கடலுக்கு சென்றிருந்தனர்.

அவர்கள் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டை மீனவர்களின் 4 படகுகளை சுற்றி வளைத்தனர்.

அதில் தாவிக் குதித்த கடற்படை வீரர்கள் மீனவர்களை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் படகுகளுடன் மீனவர்கள் 15 பேரையும் சிறை பிடித்தனர்.

தொடர்ந்து அவர்களை இலங்கை யாழ்ப்பாணம் காரை நகர் பகுதியில் உள்ள முகாமிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்பிறகே மீனவர்கள் 15 பேரும் விடுவிக்கப்படுவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரியவரும்.

ஏற்கனவே கடந்த மாதம் (செப்டம்பர்) 19–ந்தேதி 5 படகுகளில் சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 19 பேரை சிறை பிடித்தனர். அவர்களின் காவலை வருகிற 28–ந்தேதி நீட்டித்து ஊர்க்காவல் படை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் மீண்டும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 15 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


Similar posts

Comments are closed.