‘அல்லாஹ்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது

Written by vinni   // October 15, 2013   //

alla‘அல்லாஹ்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாத பிறமதத்தினர் பயன்படுத்த முடியாது என மலேசியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மலேசியா நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரும் தங்களது கடவுள்களை குறிக்கும் வகையில் மலாய் மொழியில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சொல் அரபு மொழியில் இருந்து மலாய் மொழிக்கு மருவி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மலாய் மொழியில் வெளியாகும் கத்தோலிக்க கிருஸ்துவ நாளிதழான ‘தி ஹெரால்ட்’ கடந்த 2009-ம் ஆண்டு கடவுளை குறிப்பிட ‘அல்லாஹ்’ என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, மலேசியாவில் பெரும் கலவரம் வெடித்தது. மசூதிகள் மற்றும் கிருஸ்துவ தேவாலயங்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக கீழ் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது.

மலேசியா பைபிள்களில் கூட கடவுளை குறிப்பிடுகையில் ‘அல்லாஹ்’ என்று கூறப்பட்டுள்ளதாக ‘தி ஹெரால்டு’ நாளிதழ் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடினார்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அந்த சொல்லை மலேசியா என்ற தனிநாடு உருவாக்கப்படுவதற்கு முன்னதாகவே பல்வேறு மதத்தினரும் பயன்படுத்தி வந்துள்ளதால், அதேபோன்று இனியும் பயன்படுத்த தடையில்லை என்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மலேசிய அரசு சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனுவின் மீது நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

‘அல்லாஹ்’ என்ற சொல், தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருக்க வேண்டும்.

கிருஸ்துவ மதத்தின் நம்பிக்கையின்படி இந்த சொல் அம்மதம் சார்ந்த ஒரு பகுதியாக காணப்படவில்லை. எனவே, முஸ்லிம்கள் மட்டுமே இந்த சொல்லை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், இதன் பயன்பாடு சமூகத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு காரணமாகி விடும் என்று நீதிபதி முஹம்மது அபாண்டி அலி தீர்ப்பு வழங்கியுள்ளார்.


Similar posts

Comments are closed.