காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம்

Written by vinni   // October 13, 2013   //

commonகாமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம்’ என மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சென்னை, மறைமலை நகரில் 12-10-2013 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக மீனவர்களைக் காப்பாற்றுக:-

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அவர்களைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசோ, மெத்தனம் காட்டுகிறது.

எல்லைப் புறத்தில் இராணுவ வீரர்களின் மீதான தாக்குதல் எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரான சவாலாகக் கருதப்படுகிறதோ அதுபோன்றே தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலும் இந்திய இறையாண்மைக்கு எதிரான சவாலாகவே கருதப்பட வேண்டும்.

தமிழக மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு அவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான பயிற்சியும் சாதனங்களும் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது
2013 நவம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமரோ, பிரதிநிதிகளோ பங்கேற்கக் கூடாது என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு. இதை வலியுறுத்தி முதலில் அறிக்கை வெளியிட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான்.
தற்போது இக்கோரிக்கைக்கான உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டிருக்கும் தோழர் தியாகு அவர்களுக்கு இச்செயற்குழு தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இந்திய அரசுக்கு அழுத்தம் தரும் விதமாக தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலில் போராட முன்வரவேண்டுமென இச்செயற்குழு அழைப்பு விடுக்கிறது


Similar posts

Comments are closed.