நரேந்திர மோடிக்கு அணிலாக இருந்து உதவுவேன்: நடிகர் எஸ்.வி.சேகர்

Written by vinni   // October 12, 2013   //

SVSekarராமருக்கு அணில் உதவி செய்தது போல நரேந்திர மோடி பிரதமராக நான் உதவி செய்வேன் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
கடந்த 8ம் திகதி நடிகர் எஸ்.வி.சேகர், பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்.

மேலும் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக இந்தியாவில் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் பிரசாரம் செய்வேன்.

ஏற்கனவே இருந்த கட்சிகளில் இருந்து நான் விலகவில்லை, விலக்கப்பட்டேன் ஆனால் இப்போது முடிந்து போன விடயங்களைப்பற்றி பேச தயாராக இல்லை.

பாரதீய ஜனதா கட்சியின் கொள்கைகளும் எனது தனி வாழ்க்கை கொள்கைகளும் ஒன்றாக இருப்பதால் பாரதிய ஜனதாவில் என்னை இணைத்துக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.

1991ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்து இருக்கிறேன்.

கடந்த 3 ஆண்டுகளாக நரேந்திர மோடியுடன் எனக்கு பழக்கம் உள்ளது. அவருடைய நல்ல குணம், மனிதநேயம், பிற மக்களை மதிக்கும் பாங்கு, குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் பிரமிப்பு, மற்றும் 3வது முறையாக முதல் அமைச்சராக மக்களால் தேர்ந்தெடுத்து இருக்கும் வெற்றி என்று அனைத்தையும் பார்த்து பிரமித்து இருக்கிறேன்.

நான் அவருக்கு கடிதம் எழுதும்போதெல்லாம், இந்தியாவின் வருங்கால பிரதமரே என்று கூறிதான் எழுதுவேன். மேலும் பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக அவரை அறிவித்ததுமே ராமருக்கு அணில் உதவி செய்ததுபோல நீங்கள் பிரதமராக ஒரு அணிலாக உதவி செய்வேன் என்று கூறினேன்.

ஒரு காலத்தில் பாரதீய ஜனதா கட்சி என்றாலே தீண்டத்தகாத கட்சி என்ற கருத்து இருந்தது. இப்போது தமிழருவி மணியன் போன்றவர்கள் பாரதீய ஜனதாவுடன் பிற கட்சிகள் கூட்டணி சேரவேண்டும் என்று கூறுவதே மிகப்பெரிய வளர்ச்சியும், மாற்றமும் ஆகும் என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.