மலாலாவின் புத்தகத்தை விற்பவர்களையும் கொல்வோம்: பாகிஸ்தான் தலிபான்கள் மிரட்டல்

Written by vinni   // October 12, 2013   //

Malala Yousafzaiபாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்தது.

தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் இங்கிலாந்து பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.

பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ள மலாலாவின் பெயர் உலகின் உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை ‘நான் மலாலா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விரும்பினார். இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது.

இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள ‘நான் மலாலா’ என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் கடந்த 8-ம் தேதி விற்பனைக்கு வந்தது.

பாகிஸ்தானில் கூட இந்த புத்தகம் ரூ.595க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் இந்த புத்தகத்தை விற்பவர்களையும் கொல்வோம் என தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று பேட்டியளித்த தெஹ்ரிக்-இ- தலிபான் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷஹிதுல்லா ஷஹித் கூறியுள்ளதாவது:-

இஸ்லாமை கைவிட்டதற்காக மேலை நாட்டு ஊடகங்களும் சர்வதேச சமுதாயமும் மலாலாவை தலையின் மீது தாக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறது.

மலாலாவை கொல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை நாங்கள் இழந்துவிட மாட்டோம். அவர் எழுதிய புத்தகத்தை பாகிஸ்தானில் யாராவது விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்களையும் கொல்லாமல் விட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.