பைலின் புயலினால் இலங்கைக்கு நேரடி பாதிப்பில்லை

Written by vinni   // October 12, 2013   //

Cycloneஇந்தியாவின் கிழக்குக் கடற்கரையை இன்று சனிக்கிழமை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பைலின் என்றழைக்கப்படும் புயலினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்று தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம் காற்றின் வேகம் அதிகரித்திருக்கும் என்றும் எதிர்வு கூறியுள்ளது.

இந்த புயல் காற்றானது யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கில் 1100 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டு இந்தியாவுக்கு கிழக்காக இன்றிரவு கடக்கும் என்றும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இந்தியாவில், ஒரிஷா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை பைலின் புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவருகிறார்கள் என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் புயலின் போது மணிக்கு 200 கிலோமீட்டர் வரையிலான வேகத்துடன் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களும், சுற்றுலாப் பயணிகளும், கடலுக்கு அருகே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய இராணுவப்படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டில் ஒரிஷாவைத் தாக்கிய பெரிய புயல் ஒன்றில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Similar posts

Comments are closed.