அரசாங்கம் தமிழர்களுடன் விசுவாசமாக செயற்படாமைக்கு காரணம் என்ன

Written by vinni   // October 12, 2013   //

r.sampanthanதமிழர்கள் புரிந்துணவுர்வுடன் வாழக்கூடிய சமவுரிமையை வழங்க அரசாங்கத்திற்கு முப்பது வருடங்கள் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையே இடையூறாக அமைந்தது என்றால் யுத்தம் நிறைவடைந்து 4 வருடங்கள் கடந்த பின்னரும் அரசாங்கம் விசுவாசமாக செயற்படாமைக்கான காரணம் என்ன என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி கேள்வியினை எழுப்பியுள்ளார்.

நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

ஐக்கிய இலங்கைக்குள் புரிந்துணர்வுடன் கூடிய சமவுரிமையுடன் வாழ்வதற்கு தமிழர்கள் எப்போதும் தயாராகவே இருந்திருக்கிறோம். அதனை பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தம் போன்றன தெளிவுபடுத்தியிருக்கின்றன. ஆனால் அவ்வாறான புரிந்துணர்வுடன் கூடிய சமவுரிமை தமிழர்களுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை. அதற்கான காரணம் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுத்திருக்கவில்லை.

வடக்கு மாகாணசபை தேர்தலில் வரலாற்றில் மிகப்பெரும் வெற்றியினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் கொடுத்திருக்கின்றார்கள். அந்த வெற்றிக்காக உழைத்த மக்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகளை இந்த தருணத்தில் கூறிக்கொள்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

நாங்கள் யாருடனும் மோதுவதற்கு தயாராக இல்லை. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்புடன் அனைவருடனும் இணைந்து செயலாற்ற நாங்கள் விரும்புகிறோம்.

நான் இந்த இடத்திலே இரண்டு விடயங்களை வலியுறுத்த விரும்புகிறேன். ஒன்று வடக்கு மாகாணசபை என்பது முழுமையாகவும், திறம்படவும் செயலாற்ற வேண்டும். அதற்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமையினை ஆற்றவேண்டும்.

காலப்போக்கில் திட்டங்களை வகுத்து செயற்படுகின்றபோது அதற்கு தேவையான உதவிகள் எமக்கு நிச்சயமாக கிடைக்கும். குறிப்பாக இந்திய பிரதமரைச் சந்தித்தபோது அவர் எமக்கு கூறிய விடயம் வடக்கு மாகாணசபையில் போட்டியிட்டு வெற்றியீட்டுங்கள். போதுமானளவு உதவிகளை நாங்கள் வழங்குகிறோம் என்று.

இதே கருத்தினை இந்தியா மட்டுமல்லாமல் வேறு பல நாடுகளும் எமக்கு கூறியிருக்கின்றன.

இரண்டாவது விடயம், தமிழர் பிரச்சினைக்கு நியாயமான ஒரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். தமிழர்கள் தங்கள் சரித்திரபூர்வமான வாழ்விடங்களில் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார அபிலாஷைகளை தங்களு டைய தீர்மானத்தின்படியே நிறைவு செய்து, எங்களுக்கே உரித்தான தனித்துவ அடையாளங்களை பாதுகாத்து வாழவேண்டும்.

அந்த மாதிரியான அரசியல் தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும். தமிழர்கள் நாம் ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றிணைந்து வாழ்வதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதனை பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தம் போன்றன அடையாளப்படுத்தி காட்டுகின்றன.

ஆனால் இலங்கை அரசாங்கம் அதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்காமல் 30வருடகால யுத்தத்தை சுட்டிக்காட்டியது. ஆனால் யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்களாகின்றபோதும், இன்றுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனவே இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை சர்வதேச மயப்பட்டதற்கு முழு பொறுப்பும் இலங்கை அரசாங்கமே. 2011ம் ஆண்டு ஒரு பேச்சுவார்த்தையினை ஆரம்பித்தோம். ஆனால் 2012ம் ஆண்டு அது அரசாங்கத்தினாலேயே குழப்பியடிக்கப்பட்ட நிலையில், அரசாங்கம் சர்வதேசத்திற்கு பல வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது. அந்த வாக்குறுதிகளையும், தமிழ் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் போல் எண்ணிக்கொண்டு தட்டிக்கழிக்கவும் அது நினைக்கின்றது.

ஆனால் நாம் ஐக்கிய இலங்கைக்குள் சமவுரிமையுடன் வாழ விரும்புகிறோம். அவ்வகையிலான தீர்வு ஒன்று நிச்சயமாக எட்டப்படவேண்டும். அதற்காக நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம்.

கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் சில பதவியேற்பில் பங்கு பற்றாமை தொடர்பாக…

பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வில் சிலர் பங்குபற்றவில்லை. அதனை ஒரு சர்ச்சையாக நாம் கருதவில்லை. சர்ச்சையும் அல்ல. முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்ஷ்வரனை மிகுந்த கஷ்டங்கள் மத்தியில் நாங்கள் மாகாணசபை தேர்தலுக்கு கொண்டுவந்தோம். அவரை மக்கள் அதிகபடியான வாக்குகளால் தெரிவு செய்திருக்கின்றார்கள்.

பல இன்னல்களுக்கும், இயலாமைகளுக்கும் மத்தியில் சீ.வி.விக்னேஸ்வரன் கடமையை சரிவரச் செய்வார், செய்யவேண்டும் என்ற நம்பிக்கையுடன் பொறுப்புக்களை அவர் கைகளில் ஒப்படைத்திருக்கின்றார்கள். மக்களுக்கு பொறுப்பு கூறவேண்டியவர் அவரே. எனவே இந்த விடயத்தில் பங்காளி கட்சிகள் சில எடுத்திருக்கும் முடிவு மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது.

ஆனால் மாகாணசபைக்குரிய அமைச்சர்களை தெரிவு செய்யவேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சருக்கே இருக்கின்றது. அவர் அதனைச் சரிவரச் செய்திருக்கின்றார்.

சகல கட்சிகளுக்கும் தகைமை அடிபபடையில், நேர்மை அடிப்படையில் அமைச்சுக்களை வழங்கியிருக்கின்றார். அவர் எவரையும் புறக்கணித்திருப்பதாக நாங்கள் அறியவில்லை.

அவர்களுக்கு தெரியவேண்டும். எங்கள் பயணம் மிக கனதியானது. மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள். ஒற்றுமைக்கே அங்கீகாரம் கொடுத்தார்கள். அந்த விருப்பத்தை, அந்த அங்கீகாரத்தை புறக்கணிக்கின்ற அல்லது சிதைக்கின்ற உரிமை எவருக்கும் கிடையாது. நாங்கள் அழைப்பு விடுகின்றோம். மாகாணச பையின், விக்னேஸ்வரனின் கரத்தை பலப்படுத்துங்கள் என்றார்.


Similar posts

Comments are closed.