ராகுல் அடுத்த பிரதமராக பதவியேற்க வேண்டும் : கட்சிக்கும், நாட்டுக்கும் தலைமை தாங்க வேண்டும்

Written by vinni   // October 11, 2013   //

f98ef125-2613-467c-8409-79ac0ef71add_S_secvpfகட்சிக்கும், நாட்டுக்கும் ராகுல் காந்தி தலைமை தாங்க வேண்டும் என்று, காங்கிரஸ் விருப்பம் தெரிவித்து உள்ளது. ராகுல் அடுத்த பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று, மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.

அது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பி.சி.சாக்கோ நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

“நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும், கட்சிக்கும், இந்த நாட்டுக்கும் ராகுல் காந்தி தலைமை தாங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த விஷயம் விவாதிக்க வேண்டிய ஒரு பிரச்சினை அல்ல. ராகுல் காந்தி எங்கள் அழைப்பை ஏற்று, தலைமை தாங்க சம்மதம் தெரிவிப்பார் என்று நம்புகிறோம்.

இந்த நாட்டு மக்களுடைய விருப்பமும் அதுதான். அடுத்த பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும், அதற்குப்பின்னரும் காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தலைமை தாங்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்”.

இவ்வாறு பி.சி.சாக்கோ கூறினார்.

பேட்டியின்போது எதிர்க் கட்சிகள் மீதும் அவர் தாக்குதல் தொடுத்தார். “ராகுல் காந்தியை பொருட்படுத்தாத எதிர்க்கட்சிகள் பற்றி நமக்கு கவலை இல்லை. பொதுமக்கள் ராகுலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அலிகார் மற்றும் பஞ்சாபில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி எழுப்பிய முக்கிய கேள்விகளுக்கு எதிர்க்கட்சிகள் பதில் அளிக்க வேண்டும்” என்றும், பேட்டியின்போது சாக்கோ குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி சமீபத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றியபோது, உ.பி. மாநிலம் முசாபர்நகரில் வகுப்பு வாத வன்முறையை தூண்டியதாக, பா.ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் மீது குற்றம் சாட்டி இருந்தார். முசாபர்நகரில் பாதிக்கப்பட்ட இந்து மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினரே இந்த தகவலை தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, நாட்டின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி பதவி ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். நேற்று முன்தினம் ராம்பூரில் பேசிய ராகுல் காந்தி, 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இளமையான அரசு பதவி ஏற்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

ராகுலின் இந்த கருத்து பற்றி கேட்டதற்கு பதில் அளித்த சுஷில்குமார் ஷிண்டே, “ராகுலின் கருத்தை நான் வரவேற்கிறேன். இளைஞர்களிடம் தலைமை பொறுப்பு வரவேண்டும் என்று அவர் சரியாகக் கூறி இருக்கிறார். மகத்தான நமது நாட்டின் பிரதமராக ராகுல் வரவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்” என்று தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.