அகதிகள் குடியுரிமை வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவிப்பு

Written by vinni   // October 10, 2013   //

courtsஇலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவித்தல் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் பி.அருள்மொழிமாறன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

“இந்திய பாராளுமன்றத்தில், 1983-ம் ஆண்டு சட்டவிரோத குடியேற்ற சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்டம் முழுவதும் சட்டவிரோதமானது. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் 12-7-2005 அன்று தீர்ப்பளித்துள்ளது.

பூடான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு குடியேறிய ‘சக்காஷ்’ என்ற இனத்தை சேர்ந்த 65 ஆயிரம் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ´சக்காஷ்´ இன மக்களுக்கு குடியுரிமை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு லட்சம் இலங்கை தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். அதில் 70 ஆயிரம் பேர் 115 அகதிகள் முகாம்களிலும், 35 ஆயிரம் பேர் வெளியிலும் வசிக்கின்றனர். இவர்களும், ´சக்காஷ்´ இன மக்களை போல், 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் வாழ்கின்றனர்.

ஒரு மனிதனின் ஆயுட்காலம் சுமார் 60 அல்லது 70 ஆண்டுகள் ஆகும். அதில், 30 ஆண்டுகளுக்கு மேல் குடியுரிமை இல்லாமல் வாழ்வது என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மனித தன்மைக்கு எதிரானது.

எனவே தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக எதிர்வரும் நவம்பர் 11ம் திகதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது.


Similar posts

Comments are closed.