வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெகன்

Written by vinni   // October 10, 2013   //

jagan-mohan-55-600-jpgதெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை போலீஸார் நேற்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனித் தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெகன்மோகன் ரெட்டி கடந்த சில தினங்களாக ஹைதராபாதில் உள்ள தமது இல்லத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை சீர்கெட்டு வந்தது குறித்து டாக்டர்கள் கவலை தெரிவித்தனர்.

இதையடுத்து, ஜெகன்மோகனை போலீஸார் நேற்று வலுக்கட்டாயமாக உண்ணாவிரத மேடையில் இருந்து அப்புறப்படுத்தி, மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து ஹைதராபாத் மேற்கு மண்டல காவல்துறை துணை ஆணையரர் வி.சத்யநாராயணா கூறுகையில்,

“டாக்டர்களின் அறிவுரைப்படி நாங்கள் அவரை நிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளோம்” என்றார்.

முன்னதாக, ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டுக்கு நேற்றிரவு11 மணிக்கு போலீஸார் சென்றனர். அங்கு அவரது ஆதரவாளர்கள் அமைத்திருந்த தடுப்புகளை அகற்றினர். ஜெகன்மோகனை ஆம்புலன்ஸில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இந்த நடவடிக்கைக்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

குடியரசுத் தலைவரை சந்தித்தார் விஜயாம்மா: இதனிடையே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கெüரவத் தலைவர் விஜயாம்மா தனது கட்சி தூதுக்குழுவுடன் தில்லி சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை புதன்கிழமை சந்தித்தார். “”ஆந்திரத்தை பிரிக்க வேண்டாம்” என அவர் குடியரசுத் தலைவரிடம் கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கையும் விஜயாம்மா தனது கட்சிப் பிரதிநிதிகளுடன் சந்தித்தார். ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் என்ற தன் கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

ஆந்திர அரசைக் கலைக்கக் கோரிக்கை: ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியை நீக்கிவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமலாக்க பரிந்துரைக்கும்படி ஆந்திர ஆளுநரிடம் தெலங்கானா ராஷ்டிர சமிதி புதன்கிழமை மனு அளித்துள்ளது.


Similar posts

Comments are closed.