தமிழர்களை ஏமாற்றிய குர்ஷித்தின் இலங்கைப் பயணம்

Written by vinni   // October 9, 2013   //

index64இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் இலங்கைப் பயணம் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தரும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில், அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் கடுமையான போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, போரை முடிவுக்கு கொண்டு வந்து, ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின.

அதற்கு அப்போது பதிலளித்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ, இலங்கையில் போர் முடிவடைந்த 6 மாதங்களில் தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூறியிருந்தார்.

போர் முடிவடைந்த பின்னர் இலங்கை சென்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிடமும் இதே உத்தரவாதத்தை ராஜபக்ஷ அளித்தார். ஆனால், அதன் பிறகு நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் முன் வரவில்லை.

இலங்கை வடக்கு மாநிலத்தில் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வட மாநிலத்திற்கு நில அதிகாரமோ அல்லது பொலிஸ் அதிகாரமோ வழங்க முடியாது என்று கூறி
தமிழர்களின் நம்பிக்கைச் செடியை கொதிநீர் ஊற்றி அழித்திருக்கிறார் ராஜபக்ஷ.

இதன்மூலம் 1987ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கும், அதனடிப்படையில் செய்யப்பட்ட 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தத்திற்கும் அவமரியாதை செய்திருக்கிறார்.

இந்த நிலையில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை எச்சரித்து, 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்த சம்மதிக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவரோ வழக்கம் போலவே ராஜபக்ஷவின் விருந்தினராக சென்று விருந்து சாப்பிட்டுவிட்டு திரும்பியுள்ளார். 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் இலங்கை பாராளுமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஆனால், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து இலங்கை பாராளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

அதை மறுத்து, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க பாராளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை; 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படி நேரடியாக அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, இலங்கையை குர்ஷித் பணிய வைத்திருக்க வேண்டும்.

ஆனால், அவரோ ராஜபக்ஷ கூறியதற்கு தலையாட்டிவிட்டு வந்திருக்கிறார். இதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்தியாவின் இறையாண்மைக்கும் குர்ஷித் துரோகம் செய்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திலும் இலங்கையை அவர் கண்டிக்கவில்லை. மாறாக, தமிழக மீனவர்கள் பேராசையுடன் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கை கடல் வளங்களையும், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

இந்திய அமைச்சராக இருந்து, தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய சல்மான் குர்ஷித், சிங்கள அமைச்சரைப் போல கருதிக்கொண்டு, தமிழக மீனவர்களை
விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது. மொத்தத்தில் சல்மான் குர்ஷித்தின் இலங்கைப் பயணம் தோல்வியடைந்து விட்டது.

தமிழகத்திற்கு சொந்தமான கச்சதீவை இலங்கைக்கு சொந்தமானது என்றும், அதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்கக்கூடாது என்றும் தடை விதித்த சல்மான் குர்ஷித், தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது தவறு தான்.

தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத சல்மான் குர்ஷித்திற்கும், மத்திய அரசுக்கும் தமிழக மக்கள் சரியான நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.