ஜெயில்களில் அரங்கேறும் திட்டங்கள்: அதிர்ச்சி தகவல்

Written by vinni   // October 8, 2013   //

jail_plan_002தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகள் மற்றும் கூலிப்படையினர் கைப்பேசியின் மூலம் சதி திட்டங்களை அரங்கேற்றுவதாக உளவு துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பெருகி வரும் குற்ற செயல்கள் தொடர்பாக உளவு துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில் பெரும்பாலான சதி திட்டங்கள் சிறையில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் கூலிப்படை மூலம் தீட்டப்படுவதாகவும், கைப்பேசி மூலம் வெளியில் உள்ள தங்களது கூட்டாளிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து சதியை அரங்கேற்றுவதும் தெரியவந்ததுள்ளது.

மேலும் முக்கிய கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன்கள், சிம்கார்டுகள், கஞ்சா, சிறிய கத்திகள் தாராளமாக புழங்குகின்றன.

வெளியில் இருந்து இவை கடத்தப்பட்டு அவர்களது கைகளுக்கு எளிதில் கிடைத்து விடுகிறது. இதற்கு உடந்தையாக பல மத்திய சிறை காவலர்கள் செயல்படுகின்றனர்.

ஆனால் இதுபற்றி அறிந்தும் சில ஜெயிலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் கண்டு கொள்வதில்லை.

இதனால் பல்வேறு குற்றச் செயல்கள் எளிதில் நடப்பதாக உளவு துறை நடத்திய பல்வேறு கட்ட விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொலிஸ் ஒருவர் கூறுகையில், கைது செய்யப்படும் பயங்கர குற்றவாளிகள் மத்திய சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.

அப்போது சிறு குற்றங்கள் செய்து விட்டு சிறைக்கு வரும் நபர்களிடம் ஆசை வார்த்தை மற்றும் மத கோட்பாடுகளை அடிக்கடி கூறி அவர்களின் மூளையை மழுங்கடித்து குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டி விடுகின்றனர்.

தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து வெளியில் வரும் அவர்கள் பயங்கர குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும் சிறைக்குள் இருக்கும் தாதாக்கள் கைபேசிகள் மூலம் இடும் கட்டளைகளை இவர்கள் செயல்படுத்துகின்றனர்.

எனவே அனைத்து மத்திய சிறைகளிலும் கைபேசிகள் புழக்கத்தை முழுமையாக தடுக்க நவீன ஜாமர் கருவிகளை உடனே பொருத்த வேண்டும்.

மேலும் சிறைகளில் செயல்படாமல் உள்ள ஸ்கேனர் கருவிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும் இவற்றை செயல்படுத்தினால் மட்டுமே குற்றச்செயல்களை பெருமளவு குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.