டிக்கெட் இல்லாமல் விமானத்தில் பறந்த 9 வயது சிறுவன்

Written by vinni   // October 8, 2013   //

planeஅமெரிக்காவில் 9 வயது சிறுவன் டிக்கெட் இல்லாமல் விமானத்தில் பறந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரைச் சேர்ந்த 9வது சிறுவன் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள செயின்ட் பால் விமான நிலையத்துக்கு சென்றுள்ளான். விமான புறப்பாடு பகுதிக்குள் மற்ற பயணிகளுடன் சேர்ந்து உள்ளே நுழைந்து சென்றுவிட்டான்.

மற்றவர்களைப் போல் பாதுகாப்பு சோதனைக்காகவும் வரிசையில் நின்றுள்ளான். பாதுகாப்பு அதிகாரிகளும் அவனை பரிசோதித்து அனுப்பிவிட்டனர். போர்டிங் பாஸ் இல்லாமல், டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் நின்ற இடத்துக்கு சிறுவன் சென்றான். விமானத்தில் இருந்த ஊழியர்கள் பயணிகளின் போர்டிங் பாஸை சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போதும் கூட்டத்தோடு கூட்டமாக சிறுவன் விமானத்துக்குள் நுழைந்துள்ளான்.

அந்த விமானம் லாஸ் வேகாஸ் நகருக்கு புறப்பட்டது. விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த சிறுவன், தனது பெற்றோர் பின்னால் அமர்ந்துள்ளதாக கூறியுள்ளான். சிறுவன் மீது விமான பணிப்பெண்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், பயணிகளின் பட்டியலை சரிபார்த்தனர். அதில் சிறுவனின் பெயர் இல்லை. விமானம் லாஸ் வேகாஸ் நகரில் தரையிறங்கியதும், போலீசாரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். அவனிடம் விசாரணை நடத்திய போலீசார் மின்னபோலிஸ் நகருக்கு திருப்பி அனுப்பினர். பெற்றோரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். இது குறித்து அவனது தாய் கூறுகையில், நண்பன் வீட்டுக்கு செல்வதாக கூறிய சிறுவன் காணாமல் போனதாகவும், இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளதாகவும் கூறினார்.

இது குறித்து போலீசார் கூறுகையில் ‘‘அந்த சிறுவன் மிகவும் குறும்புக்காரன் என்றும், அவன் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவன் என்றும், விமான நிலையத்தில் இதற்கு முன் பல முறை புகுந்து குறும்புத்தனம் செய்துள்ளான். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட பயணி ஒருவரின் பையை எடுத்து வேறு இடத்தில் வைத்து சென்றான்’’ எனவும் தெரிவித்தனர். மிகவும் பரபரப்பான விமான நிலையத்தில் சிறுவன் ஒருவன் டிக்கெட் இல்லாமல் விமானத்தில் பறந்த சம்பவம், விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்வி குறியாக்கியுள்ளது.


Similar posts

Comments are closed.