இந்தியாவிற்கு வருகை தரும் 40 நாட்டவர்களுக்கு உடனடி விசா அனுமதி

Written by vinni   // October 8, 2013   //

passport-india-visaஇந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக உடனடி விசா பெறும் திட்டத்தை இன்னும் 40 நாடுகளுக்கு அரசு அனுமதித்துள்ளது. இணையதளத்தில் விண்ணப்பம் அளிக்கும் முறையை உருவாக்கி மூத்த குடிமக்களுக்கும், மாநாடுகளில் கலந்துகொள்ள வருபவர்களுக்கும் உடனடியாக விசா கிடைக்குமாறு புதிய நடைமுறைகளை இந்தியா நேற்று அறிவித்தது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாட்டவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தால் இந்தியா வந்தவுடன் உடனடி விசா அனுமதியைப் பெறலாம்.

இதேபோல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் விசா அனுமதியை எளிதாக்குவதன்மூலம் கருத்தரங்குகள் போன்றவற்றிக்கு வருகை தரும் மக்களுக்கு கால விரயத்தை தடுத்திடும்விதமாக இந்தத் திட்டம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுநாள் வரை, ஜப்பான், நியூசிலாந்து, வியட்நாம் போன்ற 11 நாட்டவர்கள் இந்த உடனடி விசா அனுமதியைப் பெற்று வந்தார்கள்.  வெளிநாட்டுப் பயணிகளுக்கான நம்முடைய நடைமுறையை மாற்றிக்கொள்ளும் தருணம் வந்துவிட்டது.

அரசின் அனைத்து உறுப்பினர்களும் இணையதளம் மூலம் 40 நாட்டவர்களுக்கு உடனடி விசா அனுமதி திட்டத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர் என்று திட்ட அமைச்சர் ராஜீவ் சுக்லா நேற்று தெரிவித்தார்.

அதிகப்படியான மனித வளமும், உட்கட்டமைப்பும் தேவைப்படும் இந்தத் திட்டத்திற்கான தெளிவான வரைமுறைகளை சுற்றுலாத்துறை மற்றும் உள்நாட்டு அமைச்சகங்கள் இணைந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் குறுகிய வருகைகள் மீதான இணையதள விண்ணப்பங்களுக்கு வழங்கப்படும் எலெக்ட்ரானிக் விசா அனுமதித் திட்டத்தின் செயல்முறையையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.


Similar posts

Comments are closed.