பிருதிவி–2 ரக ஏவுகணைகள் ராணுவ பயன்பாட்டுக்கு : எத்தகைய திடீர் போரையும் சந்திக்கும் திறமை இந்தியாவுக்கு இருப்பது உறுதி

Written by vinni   // October 7, 2013   //

இந்தியாவின் பாதுகாப்புக்காக பிருதிவி ரக ஏவுகணைகள் உருவாக்கப் பட்டுள்ளன. இதில் பிருதிவி– 2 ரக ஏவுகணைகள் சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.

prithvi_2பிருதிவி–2 ரக ஏவுகணைகள் ராணுவ பயன்பாட்டுக்கு சேர்க்கப்பட்டு விட்டது. இந்த ரக ஏவுகணையில் சுமார் 500 கிலோ முதல் 1000 கிலோ வரை எடை கொண்ட வெடி மருந்துகளை வைத்து பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த ஏவுகணைகளில் அணு ஆயுதங்கள் பயன்படுத்த முடியும்.

இரட்டை என்ஜின்கள் கொண்ட பிருதிவி–2 ரக ஏவுகணைகளில் நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பிருதிவி–2 ரக ஏவுகணைகள் அடிக்கடி சோதித்து பார்க்கப்பட்டு வருகின்றன.

கடைசியாக கடந்த ஆகஸ்டு மாதம் 12–ந்தேதி பிருதிவி–2 ரக ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்றும் இந்த ஏவுகணை சோதனை நடந்தது.

ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இருந்து அந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. அந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை காலை 9.14 மணிக்கு தாக்கியது. இதன் மூலம் இன்று நடந்த பிருதிவி–2 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.

பிருதிவி–2 ஏவுகணை சோதனை ராடார்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை தாக்கியதும் காட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை மூலம் எத்தகைய திடீர் போரையும் சந்திக்கும் திறமை இந்தியாவுக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.