இங்கிலாந்து சிறைகளில் இருக்கும் இந்தியக் கைதிகளை திருப்பி அனுப்ப முடிவு

Written by vinni   // October 7, 2013   //

prisonஇங்கிலாந்து நாட்டு சிறைச்சாலைகளில் தற்போது தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 11,127 ஆகும். அதில் 2,233 பேர் ஆசிய நாட்டவர்கள் ஆவார்கள். இதில், பாகிஸ்தானியர்கள் 509 பேரும், இந்தியர்கள் 447 பேரும், வியட்நாம் நாட்டவர் 424 பேரும், வங்காளதேசத்தவர்கள் 242 பேரும்,சீன நாட்டவர்கள் 210 பேரும் உள்ளனர்.

இவர்கள் தங்களின் மீதி தண்டனைக் காலத்தை அவரவர் தாய்நாடுகளில் கழிக்கலாம் என்ற முடிவினை இங்கிலாந்து அரசு எடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பினை இங்கிலாந்து நாட்டின் உள்துறை செயலர் தெரிசா மே இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் உயர்பாதுகாப்பு நிறைந்த சிறைகளில் ஐந்து ஆசிய நாட்டவர்களில் ஒரு இந்தியர் என்ற கணக்கில் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளனர். எனவே, குடியேற்ற அமலாக்க அதிகாரிகள் ஒவ்வொரு பெரிய காவல்நிலையத்திலும் இந்தத் தகவல்களைப் பெற்று அதன் அடிப்படையில் கைதிகளின் எண்ணிக்கை விபரத்தைத் தயார் செய்யகூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அளிக்கப்பட்ட தகவல்களின்படி வெளிநாட்டு சிறைக்கைதிகளின் எண்ணிக்கையில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர். இவர்கள் இந்தியாவிற்கு அனுப்ப படுவதன் மூலம் அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அருகிலேயே மீதியுள்ள தண்டனைக் காலத்தைக் கழிக்க முடியும் என்று இங்கிலாந்து அரசு கருதுகின்றது.

மேலும், இத்தகைய வெளிநாட்டுக் கைதிகளை அவர்கள் நாட்டிற்கு அனுப்புவதன் மூலம் இங்கிலாந்து சிறைச்சாலைகளில் நிரம்பியுள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கமுடியும் என்று அந்நாட்டு அரசு கருதுகின்றது.


Similar posts

Comments are closed.