பாதுகாப்புத்துறையின் ஊழியர்கள் மீண்டும் பணிக்கு அழைப்பு

Written by vinni   // October 6, 2013   //

images (6)அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் அரசாங்கக் கடன்தொகையின் உச்ச வரம்பு குறித்து இரு கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட விவாதத்தின் காரணமாக ஒபாமா அரசு பொதுப்பணித்துறை ஊழியர்களைத் தற்காலிகமாக ஊதியமில்லாத பணி விடுப்பில் அனுப்பியது. இந்த நடவடிக்கை மேலும் தொடரக்கூடும் என்ற அச்சமும் பொதுமக்களிடையே எழுந்தது.

இந்த நிலையில், நேற்று பாதுகாப்புச் செயலரான சக் ஹெகல் பணிவிடுப்பில் செல்லுமாறு அறிவிக்கப்பட்ட பாதுகாப்புத்துறையின் ஊழியர்கள் வரும் வாரம் மீண்டும் பணிக்குத் திரும்பலாம் என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறையின் இணை செயலரான ராபர்ட்.எப்.ஹேல் பணிநீக்கம் செய்யப்பட்ட 3,50,000 ஊழியர்களில் 90 சதவிகிதம் பேர் திரும்ப அழைக்கப்படலாம் என்று தெரிவித்தார். கடந்த செவ்வாய்க் கிழமை அன்று தொடங்கிய இந்த பணிநீக்க செயல்பாட்டினால் 8,00,000 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நல்வாழ்வு, திறன், மன உறுதி, பங்களிப்பு மற்றும் உடனடி சேவைப் பிரிவில் இருப்பவர்கள் மீண்டும் அழைக்கப்படலாம் என்று பெண்டகன் ராணுவத் தலைமையகமும், நீதித்துறை உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

முழுவதுமாக அனைவரையும் திரும்ப அழைக்கமுடியாது என்று நீதித்துறை தெரிவித்திருப்பதால் நாட்டின் பாதுகாப்பிற்கு உதவும் வண்ணம் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற ஹேல், இது மிகவும் கடினமான பணியாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார். ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் சொத்து, வாழ்வு நலம் குறித்து பணியில் ஈடுபடுவோரே முதலில் திரும்ப அழைக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.


Similar posts

Comments are closed.