மாரடைப்பு நோயை தடுக்க இந்தியா- அமெரிக்கா கூட்டு முயற்சி

Written by vinni   // October 6, 2013   //

இந்திய அமெரிக்க மருத்துவர்கள் மற்றும் அமெரிக்க இதய சங்கத்தினர் இணைந்து இந்தியாவிலும், அமெரிக்காவிலும் மாரடைப்பு நோய்த் தடுப்பு மற்றும் அந்நோயினால் ஏற்படும் இறப்பைக் குறைக்கும் திட்டத்தை செயல்படுத்த இணைந்துள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மருத்துவர்கள் சங்கமும், அமெரிக்க இதய கழகமும் இதற்கான ஒத்துழைப்புக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

heartஇந்தக் கூட்டு முயற்சி, குறிப்பாக இந்தியர்கள் மற்றும் இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதும் அவற்றின் மூலம் இறப்பு விகிதங்கள் அதிகரிப்பதுவும் கவனத்தில் கொள்ளப்பட்டதால் எடுக்கப்பட்டது என்று இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரு கழகங்களின் தலைமை விபரங்களை விவாதித்து ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வரும் நவம்பர் மாதம் 17-ம்தேதி அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் உள்ள டெக்சாஸ் நகரில் இவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பின்னர், இவர்கள் அமெரிக்க இதய கழகத்தின் சுவாச அறிவியல் திட்டத்தை இந்தியாவின் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தி இதற்கென சுவாசப் பயிற்சி ஆசிரியர்களை உருவாக்கும் எண்ணத்தில் உள்ளனர்.

மேலும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய சமூகத் திட்டங்களை இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது பற்றியும் இந்தக் கழகங்கள் பரிசீலிக்கும். இந்தியாவில் உள்ள அகமதாபாத் நகரத்தில் விரைவில் எட்டாவது உலக சுகாதார மாநாடு நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் இத்தகைய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது மிகப் பொருத்தமான ஒன்றாகும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மருத்துவர்கள் கழகத்தின் தலைவர் ஜெயேஷ் ஷா தெரிவித்தார்.

இந்திய அமெரிக்க மருத்துவர்கள், இந்தியாவின் மருத்துவர்களுடன் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் இந்த நோய்த்தடுப்புத் திட்டம், அமெரிக்க இதய சங்கம் மற்றும் அமெரிக்க இந்திய மருத்துவர்கள் சங்க மாநாடுகளின் ஒத்துழைப்பு மூலம் பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.