அமெரிக்க ஊழியர்களின் பணிநிறுத்தம்;இந்தியாவின் விண்கல திட்டத்தை பாதிக்குமா ?

Written by vinni   // October 5, 2013   //

amaricaஅமெரிக்காவில் தற்போது ஒபாமா அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் பொதுத்துறை ஊழியர்களின் பணிநிறுத்தம் லட்சக்கணக்கான மக்களை கவலைக்குரியதாக மாற்றியுள்ளது. இந்த நடைமுறை தற்போது இந்திய அரசின் லட்சிய விண்வெளித்திட்டமான செவ்வாய்க் கிரகத்திற்கு செலுத்த இருக்கும் விண்கலத் திட்டத்தையும் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ரூ. 450 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் வரும் 28 ஆம் தேதி மாலை 4.15 மணி அளவில் தங்களது ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்துவதாகத் திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலம் பெங்களூருவில் தயாரிக்கப்பட்டு மிகுந்த பாதுகாப்புடன் கடந்த 3 ஆம் தேதி சென்னை வந்து சேர்ந்தது. இதனை விண்ணில் செலுத்துவதற்கு அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் தொடர்பு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டும் ஆதரவுகள் தேவை. அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள் பணிநிறுத்தம் இத்தகைய விண்கல கண்காணிப்பு நிலையங்களையும் பாதித்துள்ளது. நாசாவும் தன்னுடைய ஊழியர்கள் 18,000 பேரில் 97 சதவிகிதத்தினரை ஊதியம் இல்லாத பணி விடுப்பில் அனுப்பியுள்ளது. இதனால் இவர்களின் பல விண்வெளி நிலையங்கள் ஊழியர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இஸ்ரோ இந்த கண்காணிப்பு நிலையங்களை நம்பி செயல்படுவது கேள்விக்குரியதாக உள்ளது.

இந்திய விண்கலத்தின் கோள் சுற்றுப்பாதை குறித்த உறுதியான, துல்லியமான வழிகாட்டுதல்களை அளிக்க நாசா ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால், அமெரிக்க அரசின் நிதி குறைபாடு காரணமாக நாசா தற்போது மூடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் இந்த நேரத்தில் இஸ்ரோவின் கோரிக்கைக்கு பதிலளிக்க இயலவில்லை என்று நாசாவின் தகவல் தொடர்பு அதிகாரி தனது பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான செலவு 70 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய செவ்வாய்க் கிரக திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த தேசிய நிபுணர்கள் குழுவின் தலைவர் பேராசிரியர் யு.ஆர்.ராவ் விண்கலத்தை செலுத்த முடிவு செய்யப்பட்ட தேதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் அதன்பின்னர் வரும் 2015 ஆம் ஆண்டின் இறுதி வரையிலோ அல்லது 2016 ஆம் ஆண்டின் தொடக்கம் வரையிலோ பூமி மற்றும் செவ்வாய்க் கிரக கோள்களின் நிலைமை இதற்குச் சாதகமாக இருக்காது என்று தெரவித்துள்ளார். எனினும் இது அரசியல் கலந்த விஷயம் என்பதால் இது பற்றி அவர் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.

இது பற்றிய முடிவு தெரிவதற்கு சில நாட்களாகும் என்று இஸ்ரோவின் தகவல் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.