புலிகளின் தடயங்களை இன்னும் வைத்துகொண்டிருக்க வேண்டிய தேவையில்லை – பிரிகேடியர் ருவான் வணிகசூரிய

Written by vinni   // October 5, 2013   //

download (4)தமிழீழ விடுதலைப்புலிகளின் தடயங்களை இன்னும் வைத்துகொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதனால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த நிலக்கீழ் பதுங்கு குழி தகர்க்கப்பட்டது என்று இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் தகர்க்கப்பட்ட பதுங்குழி புலித்தலைவருடையதா என்பது குறித்து எமக்கு சரியாக கூறமுடியாது. என்றாலும் அது புலிகளின் பதுங்கு குழியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள நிலக்கீழ் பதுங்கு குழி தகர்க்கப்பட்டது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப்புலிகளின் தலைவரின் பதுங்கு குழியும் இந்த பிரதேசத்திலேயே இருந்தது. மூன்று மாடிகளை கொண்ட இந்த பதுங்கு குழியிலிருந்து அவசரமாக வெளியேறுவதற்கான சுரங்க பாதையும் இருந்தது.

அந்த பதுங்கு குழிக்கு முன்பாக பிரபாகரன் தன்னுடைய வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கான மண்டபமொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
புலிகளின் பதுங்கு குழிகள் பல அழிக்கப்பட்டுவிட்டன. இந்த பதுங்கு குழியை சுற்றி மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. ஆகையினால் இந்த பதுங்கு குழியை தகர்ப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

கண்ணிவெடிகளை அகற்றாமல் பதுங்கு குழியை தகர்ப்பதனால் ஏற்படும் சேதங்களை குறைத்துகொள்ளவதற்கே கண்ணிவெடிகளை அகற்றியதன் பின்னர் இந்த பதுங்கு குழி தகர்க்கப்பட்டது.

பதுங்கு குழியை சுற்றி புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் யாவும் கடந்த வாரமே அகற்றப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பதுங்கு குழிக்கு முன்பாக பாதுகாப்பு கூடாரங்களும் அமைக்கப்பட்டிருந்தன. பிரபாகரனின் வாகனம் அந்த வீட்டுக்குள் நுழைவதற்கான வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

பதுங்கு குழியை சுற்றி ஆறு வரிசைகளில் முட்கம்பிகள் கட்டப்பட்டிருந்தன. ஒரு வரிசையிலிருந்து மற்றுமொரு வரிசைக்கான தூரம் 20 அல்லது 25 மீற்றராக இருந்தது. அவற்றுக்கு இடையிலும் பாதுகாப்பு கூடாரங்களும்; இருந்தன என்றும் அவர் கூறினார்.

இந்த பதுங்கு குழியை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி கடந்த வாரம் முதல் நிறுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.