மத்திய மந்திரிசபையில் இருந்து சிரஞ்சீவி உள்பட 4 மந்திரிகள் ராஜினாமா

Written by vinni   // October 4, 2013   //

Siraதனி தெலுங்கானா குறித்து மத்திய மந்திரிசபை முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் நேற்று ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தன.
ஆந்திர மாநில மந்திரிகள் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டியை சந்தித்து பேசினார்கள்.

பின்னர் மத்திய மந்திரிசபையின் முடிவு அறிவிக்கப்பட்டதும் சீமாந்திரா பகுதியை சேர்ந்த 15 மந்திரிகள், 50 எம்.எல்.ஏ.க்கள், 10 எம்.எல்.சி.க்கள், 2 எம்.பி.க்கள் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். நிதி மந்திரி அனம் ராமநாராயண ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், இனியும் காத்திருக்காமல் ராஜினாமா செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் ஏற்கனவே வற்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சுற்றுலாத்துறை மந்திரி சிரஞ்சீவி, மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பல்லம் ராஜூ, ரெயில்வே இலாகா ராஜாங்க மந்திரி சூர்ய பிரகாஷ் ரெட்டி, ஜவுளித்துறை ராஜாங்க மந்திரி சாம்பசிவ ராவ் ஆகியோர் நேற்று இரவு தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள்.

சிரஞ்சீவி தனது ராஜினாமா கடிதத்தை பேக்ஸ் மூலம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பி வைத்ததாக அவரது உதவியாளர் தெரிவித்தார்.

இதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் உண்டவள்ளி அருண்குமார், ஆனந்த வெங்கடராம ரெட்டி, சப்பம் ஹரி ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்ததற்கு சீமாந்திரா பகுதியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தெலுங்கானா பகுதியை சேர்ந்தவர்கள் மந்திரிசபையின் முடிவை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்.


Similar posts

Comments are closed.