தமிழ் மக்களின் தேர்தல் தீர்ப்பை மதித்து காணி, பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டும்

Written by vinni   // October 4, 2013   //

tamilஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று, இலங்கையின் அரசு நடந்து கொள்ளும் என எதிர்பார்த்ததற்கு மாறாக, மாகாண கவுன்சில்கள் பொலிஸ், நிலம் சம்பந்தப்பட்ட துறைகளில் அதிகாரம் செலுத்த இயலாது என்றும், அவை மத்திய அரசின் நேரடிப்பொறுப்பில் கொண்டுவரப்படும் என அறிவித்திருப்பது, தேர்தல் முடிவுகளை முற்றாக நிராகரிக்கும் செயலாகும்.

பதின்மூன்றாவது சட்டத்திருத்தில் மாகான கவுன்சில்களுக்கு உள்ள நிலம் பொலிஸ் தொடர்பான அதிகாரங்களை மறுக்கவோ, குறைக்கவோ கூடாது என இந்திய அரசு வற்புறுத்தியதால், இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த அடிப்படையில் 13-வது அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதால், அதை இலங்கை அரசு நிறைவேற்றுவதை இந்திய அரசு கண்டிப்பான நிபந்தனை ஆக்கக்கோருகிறோம்.

வடக்கு மாகாண கவுன்சிலுக்கு நடத்தப்பட்ட தேர்தலின் போது, போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டணி, அதிகாரங்களைப்பெற்று, மக்களின் உரிமைகளை மீட்டுத்தருவோம் என்றே பிரச்சாரம் செய்தது. அதை ஏற்று மக்கள் பேராதரவு அளித்து வெற்றிபெற செய்துள்ளனர்.

இந்நிலையில், கிழக்கு மாகாண கவுன்சிலில், ராஜபக்ஷ கூட்டணியில் உள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சேர்ந்த உறுப்பினர், மாகாணங்களுக்கு 13-வது சட்டத்திருத்தப்படி, பொலிஸ், நிலம் சம்பந்தப்பட்ட முழு அதிகாரம் வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் அவையில் இருந்த 17 உறுப்பினர்களில் 16 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டணி 75 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. தேர்தல் அறிக்கை வற்புறுத்துவதே மாநில அதிகாரங்கள் தான். இதை ராஜபக்ஷ அரசு நிராகரித்து, தமிழின அழிப்பை தொடர்ந்து சட்ட ரீதியில் செய்ய முற்படுவது கண்டிக்கத்தக்கது.

இந்திய அரசு, தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, தமிழின அழிப்பை தடுத்து, வடக்கு, கிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு முழு அதிகாரம் பெற்றுத்தர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.