அக்டோபர் 30ம் தேதி முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும்

Written by vinni   // October 4, 2013   //

jeyalalithaசொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேரும் அக்டோபர் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி (பொறுப்பு) முடிகவுடர் முன் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், இவ்வழக்கில் ஆஜராக உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி பிறப்பித்துள்ள உத்தரவு நகலை நீதிபதியிடம் வழங்கினார். அதை பெற்று கொண்ட நீதிபதி முடி கவுடர், வழக்கில் ஆஜராக அவருக்கு அனுமதி வழங்கினார். அதை தொடர்ந்து வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்ககோரி, அவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் குமார், அசோகன், மூர்த்தி ராவ், பரணிகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் மனு கொடுத்தனர்.

அதை வாங்கி படித்த நீதிபதி, குற்றவாளிகள் ஏன் ஆஜராகவில்லை என்று கேட்டார். வழக்கு விசாரணை முடிந்து, இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாலும், அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு எதுவுமில்லை என்பதால், ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்க வேண்டும் என்றனர். அதை ஏற்க மறுத்த நீதிபதி, குற்றவாளிகள் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா? என்று அரசு வழக்கறிஞரிடம் கேட்டார். அவர் இல்லை என்று பதிலளித்தார்.

பின் அடுத்த விசாரணையின் போது குற்றவாளிகளை ஆஜர்படுத்துகிறோம் என்று கையெழுத்து போட்டு தரும்படி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டார். அவர்கள் கையெழுத்து போட மறுத்து விட்டனர். நீங்கள் உறுதி கொடுத்தா லும், கொடுக்காவிட்டா லும், அடுத்த விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேரும் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும். அன்று மட்டுமல்ல ஒவ்வொரு விசாரணையின் போதும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் எழுந்து, இவ்வழக்கை விசாரணை நடத்தி ஓய்வு பெற்றுள்ள நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவை மீண்டும் நீதிபதியாக தொடர உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க வுள்ளது. ஆகவே அவர் விசாரணையை நடத்த வசதியாக அக்டோபர் 25ம் தேதி ஒத்திவைக்க வேண்டும் என்றார்.
அதை கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதி முனிகவுடர், தற்போது இவ்வழக்கை விசாரணை நடத்தும் நீதிபதி நான்தான், கர்நாடக உயர் நீதிமன்றம் எனக்கு இதற்கான அனுமதி வழங்கியுள்ளது. இந்த தேதியில் தான் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. நீதிபதி மாறினாலும்,

வழக்கு ஒன்றுதான் என்று அதிருப்தி தெரிவித்ததுடன், இன்று (நேற்று) விசாரணை நடத்த நான் தயாராகவுள்ளேன். வாதம் செய்ய நீங்கள் தயாரா? என்று அரசு வழக்கறிஞரிடம் கேட்டார். அவர் சற்று தயக்கம் காட்டியதும், வழக்கு விவரங்களை நான் படிக்க வேண்டும் என்பதால், அடுத்த விசாரணையை அக்டோபர் 30ம் தேதி ஒத்திவைக்கிறேன்.
அன்று வாதம் செய்ய தயாராக வரும்படி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டதுடன், குற்றம் சாட்டப்பட்டவர்களும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

எக்ஸ்ட்ரா தகவல்

நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்ற பிறகு பொறுப்பு நீதிபதியாக பதவியேற்றுள்ள முடிகவுடர் ஏற்கனவே முத்திரைத்தாள் மோசடி வழக்கை விசாரணை நடத்தியவர். மிகவும் கண்டிப்பான நீதிபதி என்று பெயரெடுத்தவர். அவர் பொறுப்பேற்ற முதல்நாளே தனது அதிரடியை
துவக்கியுள்ளார்.


Similar posts

Comments are closed.