திஹார் உட்பட முக்கியச் சிறைகளைத் தாக்க சதி

Written by vinni   // October 3, 2013   //

jailதில்லி திஹார் சிறை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள முக்கியச் சிறைகள் மீதோ அல்லது அதில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளை சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் போதோ “இந்தியன் முஜாஹிதீன்’ பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறைக்கு உளவுத் துறை அண்மையில் அனுப்பியுள்ள எச்சரிக்கைக் குறிப்பில் கூறியிருப்பது:

தில்லி திஹார் சிறை, மும்பை, புணே, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள முக்கியச் சிறைகளில் இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் நோக்குடன் சிறைகளின் மீதோ அல்லது பயங்கரவாதிகள் சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணைக்கோ, மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்லப்படும் போதோ தாக்குதல் நடத்தலாம்.

இப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் பதுங்கியுள்ள “ஸ்லீப்பர் செல்’ (சாதாரணமானவர்கள் போல வாழும் இவர்கள் தலைமையிடமிருந்து திடீரென வரும் உத்தரவுகளை நிறைவேற்றுபவர்கள்) மூலம் நாசவேலையில் ஈடுபடலாம். எனவே, சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் அளிக்கப்படும் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்ற எச்சரிக்கைக் குறிப்பை நக்சல் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர், ஜார்கண்ட், பிகார், ஓடிசா, மேற்கு வங்கம், ஆந்திரம், மகராஷ்டிரம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய உளவுத் துறை கடந்த 18-ஆம் தேதி அனுப்பியது. ஆனால், கடந்த மாதம் 20-ஆம் தேதி தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதி அஜ்மல் உஸ்மானி விசாரணைக்காக மும்பையின் கலஹோடா மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு உணவு இடைவேளையின் போது தப்பியோடிவிட்டார்.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம், காண்ட்வா சிறையில் அடைக்கப்பட்டிருந்த “சிமி’ என்ற தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு பேர் சிறையின் கழிவறை சுவரை உடைத்துக் கொண்டு, கடந்த செவ்வாய்க்கிழமை தப்பியோடிவிட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி அப்துல் கரீம் துன்டா (70) என்ற இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதியை இந்திய-நேபாள எல்லையில் தில்லி போலீஸார் கைது செய்தனர். புது தில்லி, பானிபட், சோனிபத், லூதியாணா, கான்பூர், வாராணசி ஆகிய நகரங்களில் 1996 முதல் 1998 வரை நடைபெற்ற 40-க்கும் அதிகமான பயங்கரவாதச் சம்பவங்களில் துன்டாவுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.

துன்டாவைத் தொடர்ந்து, முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த யாசின் பட்கலை பிகார் மாநிலத்தில் அம் மாநில போலீஸார் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி கைது செய்தனர். தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர், அகமதாபாத், புணே, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் 2008-இல் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்வ வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்ததால், தேசியப் புலனாய்வு ஏஜென்சியிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டார்.

இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகள் வரை, இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் மூளையாக செயல்பட்டவர்கள். இவர்கள் மூலம் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என்று மத்திய உளவுத் துறையும், புலனாய்வு அமைப்புகளும் நம்புகின்றன. மும்பை தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல் சம்பவங்களில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் கடந்த ஆண்டு டிசம்பர் வரை பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வந்ததை அப்துல் கரீம் துன்டா உறுதிப்படுத்தியுள்ளதும் அந்த நம்பிக்கையை வலுப்படுத்துவதாக உள்ளது என அதிகாரிகள் கருதுகின்றனர்.

மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, திஹார் உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள முக்கிய சிறைச் சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் கைது செய்யப்பட்ட துன்டா, யாசின் பட்கல் ஆகிய இருவரும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்களில் தேடப்பட்டு வந்ததால், இருவரையும் வெவ்வேறு நகர போலீஸாரும், தேசியப் புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளும் விசாரணைக்காக அடிக்கடி வெளியூர்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். இவர்களைப் போல, பல்வேறு நகரச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மேலும் சில பயங்கரவாதிகளும் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, வட மாநிலங்களில் பயங்கரவாதிகளுக்கும், அவர்கள் அடைக்கப்பட்டுள்ள சிறைகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.