ஸ்மித், ரோஹித் அதிரடி: அரையிறுதியில் மும்பை

Written by vinni   // October 3, 2013   //

rohit-sharma5-300பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய மும்பை அணி, 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 152 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் வெற்றி இலக்கை 14.2 ஓவர்களில் எட்டினால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழல் மும்பைக்கு இருந்தது. இந்தத் தடையை, ஸ்மித்தும், ரோஹித் சர்மாவும் தங்களது அதிரடி ஆட்டத்தால் தகர்த்து, மும்பை அணி அரையிறுதியை எட்ட வைத்தனர்.

இதனால், அரையிறுதிக் கனவுடன் இருந்த ஒடாகோ அணி, சோகத்துடன் நியூஸிலாந்து திரும்ப உள்ளது.

வொயிட்மேன் அரைசதம்: சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 19-வது ஆட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், ஸ்கார்ச்சர் அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து ஸ்கார்ச்சர்ஸ் அணி 149 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக வொயிட்மேன் ஆட்டமிழக்காமல் 52 ரன்களும், ஆஷ்டன் அகர் 35 ரன்களும் எடுத்தனர்.

மும்பைத் தரப்பில் கெüல்டர் நீல் 3 விக்கெட்டுகளையும், ஓஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

150 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கியது மும்பை அணி.

இந்த ஆட்டத்தில் சச்சினை டக் அவுட் ஆக்க வேண்டும் என்று ஸ்கார்ச்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் முன்னரே தெரிவித்திருந்தார்.

லாங்கர் கூறியதுபோலவே, சச்சினை பெஹரன்ட்ராஃப் டக் அவுட்டாக்கினார். ஆனால், மற்றொரு தொடக்க வீரர் ஸ்மித், விளாசலில் ஈடுபட்டார். 25 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்களில் ஸ்மித் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் (10), போலார்ட் (23) ரன்களில் வெளியேறினர். ஆனால் கேப்டன் பொறுப்பை உணர்ந்து ரோஹித் அதிரடியாக விளையாடினார். இறுதியில், 13 ஓவரை எதிர்கொண்ட அம்பாட்டி ராயுடு தொடர்ந்து 2 சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
24 பந்துகளைச் சந்தித்த ரோஹித் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்களை எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். ஆட்ட நாயகன் விருது ரோஹித்துக்கு அளிக்கப்பட்டது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் மும்பை 10 புள்ளிகளைப் பெற்றது. ஒடாகோ அணியும் 10 புள்ளிகளுடன் இருந்தது. இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.


Similar posts

Comments are closed.