நான் ஆட்சியமைத்தால் என்னை வீழ்த்த முடியாது: விஜயகாந்த் அதிரடி

Written by vinni   // October 2, 2013   //

vijayakanthநான் ஆட்சிக்கு வந்துவிட்டால் என்னை வீழ்த்துவது கஷ்டம் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியான ரிஷிவந்தியத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். விஜயகாந்த்.

அப்போது நூரோலை கிராமத்தில் ரூ. 2½ லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார்.

பின்பு அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் ரூ. 5½ லட்சத்தில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலை கடையை திறந்து வைத்த அவர் அதனைத் தொடர்ந்து ரிஷிவந்தியம் சட்டபேரவை உறுப்பினர் அலுவலகத்தில் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்பு நிரூபர்களுக்கு பேட்டி அளித்த அவர், எனது பெயரை கெடுக்கும் முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபட்டுள்ளது. வைகுண்டராஜன் மணல் அள்ளியது தவறு என தூத்துக்குடியில் பேசினேன். அதற்காக என் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கூட்டணி வைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றில்லை. மக்கள் மனது மாறி ஒரே கட்சிக்கு ஓட்டளித்து ஆட்சியில் அமர வைப்பார்கள்.

சினிமா நூற்றாண்டு விழாவில் என்னை புறக்கணித்ததை பற்றி நான் கவலைப்படவில்லை. வரும் பாராளுமன்ற தேர்தலில் எது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்.

அதுகுறித்து இப்போதே கூறிவிட முடியாது. கடந்த தேர்தலைவிட தற்போது தே.மு.தி.க. பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

பிடாகம் அருகே தென் பெண்ணை ஆற்றில் மணல் அள்ள லாரிகள் வரிசையில் நிற்பது வேதனையாக உள்ளது. இதை எதிர்த்து கேட்டால் என் மீது வழக்கு போடுகின்றனர்.

எத்தனை வழக்குகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். என்னை ஒருமுறை மக்கள் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமரவைத்து விட்டால் அதன் பின் நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் கூட்டணி அமைத்து, குட்டிக் கரணம் அடித்தாலும் ஆட்சியில் இருந்து என்னை இறக்க முடியாது.

ஏனென்றால் நான் சம்பாதிக்க ஆசைப்படுவதில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவன் என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.