அரச‌ ஆட்சிக்குட்பட்டிருக்கும் யாழ்.மாநகரசபை நிர்வாகத்திற்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம்

Written by vinni   // October 1, 2013   //

images (2)ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சிக்குட்பட்டிருக்கும் யாழ்.மாநகரசபை நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் சாகும் வரையான உண்ணாவிரதப்போராட்டமொன்றை இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளனர்.

நடந்து முடிந்த மாகாணசபை தேர்தல் தோல்வியின் எதிரொலியாக யாழ்.மாநகரின் சுத்திகரிப்பு பணியினில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சுமார் 400 வரையிலான சுகாதாரத் தொழிலாள்களை இடைநிறுத்த மாநகரசபை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.ஈபிடிபி சார்பு மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் குறித்த தொழிலாளர்களை தமது கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களினில் ஈடுபட ஏற்கனவே பணித்திருந்தமை சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

இந்நிலையினில் குறித்த பணியாளர்கள் தமக்கு ஆதரவாக செயற்படவில்லையெனக்கூறியே தற்போது அவர்களை வீடுகளிற்கு அனுப்ப முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தொழிலாளர்கள் தரப்பினில் கூறப்படுகின்றது.அத்துடன் மாநகர துப்பரவு பணிகளை தனியாரிடம் கையளிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமே தாம் வீடுகளிற்கு அனுப்பப்படுவதென தொழிலாளர்கள் தரப்பினில் கூறப்படுகின்றது.

எனினும் ஈபிடிபி அமைப்பு தமது கட்சி ஆதரவாளர்களை  தொழிலாளர்களாக நியமித்து பாரிய நிதி மோசடிகளை செய்து வருவதாக ஏற்கனவே எதிர்கட்சியான கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி வந்திருந்தது.

இதனிடையே கொள்ளை சம்பவங்களின் பின்னணியினிலிருந்ததாக குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்டு தற்போது பிணையினில் விடுவிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் என்பவரே இப்போராட்டத்தினை வழி நடத்தி வருகின்றார்.இவர் முன்னர் ஈபிடிபியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவராக யாழ்.மாநகரசபையினில் இருந்த போதும் தற்போது சுதந்திரக்கட்சியினில் இணைந்துள்ளார். கொள்ளைச்சம்பவ குற்றச்சாட்டினையடுத்து ஈபிடிபி அமைப்பு குறித்த நபரை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.