பதவி பறிப்பு அவசரச் சட்டம் :ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியால் ஒப்புதல் வழங்கப்படவில்லை

Written by vinni   // October 1, 2013   //

Pranab_380_PTI2குற்றவழக்கில் சிக்கி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும் என்று கடந்த ஜூலை மாதம் 10–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை அளித்தது.

இது எல்லா அரசியல் கட்சியினருக்கும் கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதையடுத்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை முடக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8 (4)ல் ஒரு திருத்தம் செய்தது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தண்டனை பெற்றாலும், அவர்கள் உடனே பதவி இழக்க மாட்டார்கள் என்று அவர்களை பாதுகாக்கும் வகையில் அந்த திருத்தம் இருந்தது. இந்த திருத்தத்தை கடந்த வாரம் மத்திய அரசு அவசரச் சட்டமாக கொண்டு வந்தது. இதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை வெடித்தது.

இதையடுத்து அந்த அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஒப்புதல் கொடுக்கவில்லை. இந்த நிலையில் அவசரச் சட்டம் முட்டாள்தனமானது என்று ராகுல் ஆவேசமாக கூறியதால், அவசரச் சட்டம் பற்றிய விவாதம் சூடு பிடித்தது.

எதிர்க்கட்சிகாரர்கள் மட்டுமின்றி தன் சொந்த கட்சிக்காரர்களும் திடீரென எதிர்த்ததால் பிரதமர் மன்மோகன்சிங் கடும் அதிர்ச்சி அடைந்தார். அமெரிக்கா சென்றுள்ள அவர், நாடு திரும்பியதும் இதுபற்றி மந்திரி சபையை கூட்டி விவாதிப்பேன் என்றார்.

மன்மோகன்சிங் இன்று இரவு அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்புகிறார். நாளை (புதன்கிழமை) அவர் தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பதவி பறிப்பு அவசரச் சட்டத்தை வாபஸ் பெற தீர்மானிக்கப்படும். அதன்படி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்ட முன்வடிவு திரும்பப் பெறப்படும்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் அவசரச்சட்டம் பற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்கனவே அதிருப்தியில் உள்ளார். அவசரம், அவசரமாக இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது ஏன் என்று அவர் மத்திய மந்திரிகள் சுசீல்குமார் ஷிண்டே, கபில்சிபல், கமல்நாத் ஆகிய மூன்று பேரையும் அழைத்து விளக்கம் கேட்டார்.

அவர்கள் கொடுத்த விளக்கத்தை பிரணாப் ஏற்கவில்லை. அவசரச் சட்டம் பற்றி அறிக்கை தாருங்கள் என்று கூறினார். இது காங்கிரஸ் தலைவர்களுக்கு பேரிடியாக இருந்தது.

இதனால் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து அதிருப்தியில் உள்ளார். எனவே அவரை சமரசம் செய்யவும், அவசரச் சட்டம் பற்றி சில விளக்கங்களை அளிக்கவும் பிரதமர் மன்மோகன்சிங் தீர்மானித்துள்ளார்.

ஆகையால் நாளை மத்திய மந்திரி சபை கூட்டத்தை நடத்தும் முன்பு ஜனாதிபதியை சந்தித்துப் பேசி விளக்கம் அளிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு அவசரச் சட்டத்தை திரும்பப் பெறுவது பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.


Similar posts

Comments are closed.