இலங்கை வன்முறை அற்ற‌ தேசமாக உருவாகியுள்ளது -சுதர்சன நாச்சியப்பன்

Written by vinni   // October 1, 2013   //

sudarshan_nachiappanஇலங்கை இப்போது வன்முறை இல்லாத தேசமாக உருவாகியுள்ளது என மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.

சென்னையில் இந்துஸ்தான் வர்த்தக சபையின் 67-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று திங்கள்கிழமை அவர் பேசியதாவது:

இந்தியா தனது பக்கத்து நாடுகள் மீது பெரும் அக்கறை கொண்டுள்ளது. இந்தியாவை விட சிறிய நாடுகளிடம் நட்புறவையும், வர்த்தகத்தையும் மேற்கொள்ள தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. இப்போது இலங்கை வன்முறை இல்லாத தேசமாக உருவாகியுள்ளது. மேலும் அங்கு வடக்கு மாகாண தேர்தல் நடைபெற்று  ஜனநாயகரீதியிலான ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை அரசு தனது ஜனநாயக நிலைப்பாட்டை உலகுக்கு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சேது சமுத்திரத் திட்டம், வர்த்தக நோக்கில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.  ஆனால் பல்வேறு காரணங்களால் அத்திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. அத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் இந்தியாவின் வர்த்தகம் மேம்படும். மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையின் காரணமாக, தமிழகத்துக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வந்தது. இப்போது அந்த அச்சம் இல்லாததால் வர்த்தகம் மேலும் மேம்படும்.

இணைப்பு: இலங்கை நட்பு நாடாக உள்ளதால் அந்நாட்டுடன் போக்குவரத்து திட்டங்களை உருவாக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இனி வரும் காலங்களில் தமிழகத்தின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கும் இடையே பாலம் அமைக்கப்படும். அதில் தரைவழி மற்றும் ரயில் போக்குவரத்தும் மேற்கொள்ளப்படும் என்றார் சுதர்சன நாச்சியப்பன்.

இந்நிகழ்ச்சியில், சென்னைக்கான அமெரிக்க துணைத் தூதர் ஜெனிஃபர் மெக்கின்டையர், இந்துஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் ஆர்.சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Similar posts

Comments are closed.