டெல்லி மாணவி கற்பழிப்பு: பஸ்சை ஒப்படைக்க கோரும் உரிமையாளர்

Written by vinni   // September 30, 2013   //

rapeடெல்லியில் கடந்த டிசம்பர் 16–ந்தேதி நள்ளிரவு வேளையில் ஓடும் பஸ்சிற்குள் 23 வயது மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார்.
இச்சம்பவம் இந்தியாவையும் கடந்து உலகளாவிய அளவில் பெண்ணியக்க ஆர்வலர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

கடுமையான காயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த அந்த பெண், இந்திய அரசின் ஏற்பாட்டின்படி சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குள்ள பிரசித்திப் பெற்ற மருத்துவமனையில் அவருக்கு அதிநவீன தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ராம்சிங், முகேஷ், அக்ஷய் தாகூர், பவன்குப்தா, வினய் சர்மா உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவி உயிரிழந்துவிட்டதால் அவர்கள் அனைவரின் மீதும் போலீசார் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளை பதிவு செய்தனர்.

இவர்களில் முக்கிய குற்றவாளி ராம்சிங் திகார் ஜெயிலில் கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டான். சிறுவன் என்பதால் சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் மற்றொரு குற்றவாளிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்கள் தவிர முகேஷ், அக்ஷய் தாகூர், பவன்குப்தா, வினய் சர்மா ஆகியோருக்கு டெல்லி செசன்சு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது.

பலியான மாணவி கற்பழிக்கப்பட்ட தனியார் பஸ், மேற்கண்ட வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சாகெட் போலீஸ் நிலைய வளாகம் அருகே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ்சின் பல கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு, டயர்களில் இருந்த காற்றும் இறக்கப்பட்டு ஒட்டடையும், தூசியும் படிந்த நிலையில் அந்த பஸ் தற்போது நின்றுக்கொண்டிருக்கிறது.

இந்த பஸ்சின் உரிமையாளரான திணேஷ் யாதவ், மேற்படி பஸ்சிற்காக டெல்லி போக்குவரத்து துறையினரிடம் ‘பர்மிட்’ பெறுவதற்காக, போலியாக உருவாக்கப்பட்ட முகவரி சான்றை சமர்ப்பித்ததாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, திணேஷ் யாதவ் மீது போலீசார் தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு திணேஷ் சிறைக்குள் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனையும் விதிக்கப்பட்டதால் இவ்வழக்கின் விசாரணை முற்றிலுமாக முடிந்து விட்டது.

இந்நிலையில், வழக்கின் விசாரணை முடிவடைந்து விட்டதால் இவ்வழக்கின் முக்கிய சாட்சியமாக போலீசார் பறிமுதல் செய்து வைத்துள்ள மேற்படி பஸ்சை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பஸ்சின் உரிமையாளரான திணேஷ் யாதவ்வின் குடும்பத்தார் கூறியுள்ளனர்.

தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என திணேஷ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை கடந்த 23ம் தேதி நடைபெற்றது.

அப்போது கோர்ட்டுக்கு வந்திருந்த திணேஷ் யாதவ்வின் குடும்பத்தாரை பத்திரிகை நிருபர்கள் சந்தித்தனர்.

அவர்களிடம் பேசிய திணேஷ் யாதவ்வின் நெருங்கிய உறவினர் ஒருவர், ‘அந்த பஸ்சுக்குள் இப்படியொரு துயரச் சம்பவம் நடைபெற்றது துரதிர்ஷ்டவசமானது.

ஆனால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள திணேஷின் மனைவியும், மகள்களும் அந்த பஸ்சின் மூலம் கிடைக்கக் கூடிய வருமானத்தை நம்பி, அது எப்போது விடுவிக்கப்படும்? என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கற்பழிப்பு வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டதால், மேற்படி பஸ்சை திரும்பப்பெற கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம்’ என்று கூறினார்.

இதுதொடர்பாக கருத்து கூறிய டெல்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர், ‘தேவைப்படும் போது அந்த பஸ்சை கோர்ட்டாரிடம் ஒப்படைப்பேன் என்று உரிமையாளரின் குடும்பத்தார் நீதிபதியிடம் வாக்குறுதி அளித்தால் ‘வழக்கு தொடர்பான சொத்து’ என்ற முறையில் ஒருவேளை நீதிபதி அந்த பஸ்சை விடுவிக்கும்படி உத்தரவிடக் கூடும்’ என்றார்.


Similar posts

Comments are closed.