சிரியாவில் பள்ளி மீது விமானக் குண்டு வீச்சு- மாணவர்கள் உள்பட 12 பேர் பரிதாப மரணம்

Written by vinni   // September 30, 2013   //

Syrians survey bombed schoolசிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

போராட்டக்காரர்களில் சிலர் அண்டை நாடுகளில் இருந்து போராயுதங்களை வாங்கி ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார்.

ராணுவம் நடத்தி வரும் வான் வழி, ஏவுகணை மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். உயிர் பிழைத்த பலர் உடல் உறுப்புகள் சிதைந்து ஊனமுற்றவர்களாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான துருக்கி, லெபனானில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபை கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

27வது மாதத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 191 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 36 ஆயிரத்து 661 அப்பாவி பொதுமக்கள் என்று சிரியாவின் உள்நாட்டு போர் நிலவரத்தை கண்காணித்து வரும் இங்கிலாந்து நாட்டின் மனித உரிமை அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த உள்நாட்டுப் போரின் போது அதிபரின் படைகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, ஐ.நா. ஆய்வு குழுவினர் சென்ற மாதம் சிரியாவுக்கு வந்து ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் இடங்களில் உள்ள மக்களை சந்தித்து விசாரணை நடத்தினர். அங்கிருந்து சில மாதிரிகளையும் அவர்கள் சேகரித்து சென்றனர்.

சொந்த மக்களையே ரசாயன ஆயுதங்களை பிரயோகித்து கொன்ற சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் ஒபாமா ஆலோசித்து வந்த வேளையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட பஷர் அல்-ஆசாத் ரசாயன ஆயுதங்களை எல்லாம் ஐ.நா. சபை அதிகாரிகளின் மேற்பார்வையில் அழித்துவிட சம்மதிப்பதாக உறுதியளித்தார்.

இந்நிலையில், போராளிகளின் ஆதிக்கத்தில் உள்ள ரக்கா நகர் பகுதியில் அமைந்திருக்கும் பள்ளியின் மீது நேற்று அரசுக்கு சொந்தமான போர் விமானங்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இஸ்லாமிய நாள்காட்டியின்படி, ஞாயிற்றுக்கிழமை என்பது வாரத்தின் முதல்நாள் என்பதால் பள்ளியின் மீது விமானம் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதால் 8 மாணவர்கள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.


Similar posts

Comments are closed.