மஹிந்தவும் விமலுமே தமிழர்கள் சாவுக்கு வழிவகுத்தோர் – கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண

Written by vinni   // September 30, 2013   //

download (4)“நாட்டின் நலனுக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ரணில் விக்கிரசிங்க செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தைக் குழப்பியடித்து மீண்டும் போர் ஆரம்பமாக காரணமாக இருந்தவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வும் அமைச்சர் விமல் வீரவன்ஸவுமே.

 இவர்களின் இந்தச் செயற்பாட்டின் காரணமாகத் தான் நாட்டில் ஒன்றரை இலட்சம் தமிழர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் காவு கொள்ளப்பட்டனர்.”
இவ்வாறு பொது எதிரணியினர் நேற்று குற்றம்சுமத்தியது.
 ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற் சங்கப்பணிமனையில் நேற்று இடம்பெற்ற இவ்வமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதன்போது நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தவை வருமாறு:
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்கவை பதவியிலிருந்து விலகக்கோரி பல எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
ரணிலை உடனடியாக பதவியிலிருந்து விலக்க வேண்டும் என வலியுறுத்தி தெற்கிலிருந்து கொழும்பு வரையிலான பாதயாத்திரை ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இவர்களைப் போன்றவர்கள் ரணிலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன. ரணில் நாட்டின் நலனுக்காகப் பாடுபட்ட ஒரு மனிதர். கட்சியின் மீதும் மக்களின் மீதும் அளவு கடந்த அன்பும், மரியாதையும் வைத்திருக்கும் ஒரு நபர்.
நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ரணில், 2002 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் குழப்பியடித்ததே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­வும், அமைச்சர் விமல் வீரவன்ஸவும்தான்.
பிரபாகரன் தனி அரசு கோருகிறார் என குறிப்பிட்டு அவ் வொப்பந்தத்தையே இவர்கள் குழப்பியடித்து துடைத்தெறிந்துள்ளார்கள். பிரபாகரன் உண்மையில் தனி அரசைக் கேட்கவில்லை.
அவர் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்க ஒரு சுய ஆட்சி முறையையே கோரினார்.
அதற்கு பின்னரான சுனாமி கட்டமைப்பை எதிர்த்தும் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்து அதை இல்லாதொழித்தார்கள். இது போன்ற சமாதான ஒப்பந்தங்களை மஹிந்தவும், விமலும் குழப்பியடித்ததனாலேயே ஒன்றரை இலட்சம் தமிழர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் அநியாயமாக யுத்தத்திற்குக் காவு கொடுக்கப்பட்டுள்ளனர்.
அன்று பிரபாகரன் சமாதான ஒப்பந்தத்தில் முன்வைத்த 26 கோரிக்கைகளைப் போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த விஞ்ஞாபனமும் காணப்படுகிறது. ஆனால், இதனையும் எதிர்த்து, இனவாதிகள் நாட்டில் மென்மேலும் துவே­சத்தை  அதிகரிக்கிறார்கள்” என்றார்.
இச்சந்திப்பில் கலந்து கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் குமரகுருபரன் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக இன்று இனவாதக் கருத்துகளை முன்வைக்கும் சம்பிக்க ரணவக்க, உதய கம்பன்பில மற்றும் விமல் வீரவன்ஸ போன்றோரை அரசு ஏன் இன்னமும் கண்டு கொள்ளாமல் உள்ளது?
இதேபோன்ற ஒரு இனவாதக் கருத்தை தமிழ் அரசியல் வாதி யாராவது பேசியிருப்பின் இந்நேரம் என்ன வாயிருக்கும். இப்படியான நிலையில் அரசு மெளனம் காப்பதுதான் புரியாமல் உள்ளது.  ”ஒருவேளை அரசே இவ்வாறான கருத்துகளைத் தூண்டி விட்டிருக்குமோ?’ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.
இவர்களின் செயற்பாடுகளை அரசு கண்டு கொள்ளாவிடின் சர்வதேச ரீதியிலான பாரிய பிரச்சினைக்கும் முகம்கொடுக்க வேண்டி ஏற்படும். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு சிறந்த மனிதர்.
வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டவர். இதை அரசும் உணர்ந்து, அவருடன்  ஒன்றிணைந்து செயற்பட்டால் நிச்சயமாக நாட்டில் நல்லிணக்கம் உருவாகும்” என்றார்.


Similar posts

Comments are closed.