நவிப்பிள்ளையின் அறிக்கைக்கு ஆதாரம் கேட்கின்றார் மஹிந்த

Written by vinni   // September 29, 2013   //

Mahinda-Rajapaksa20121-e1352854380972“ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, பேரவையில் சமர்ப்பித்த இடைக் கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கவலைகள் குறித்து விசாரணை நடத்துவதானால் அதற்கு ஆதாரங்கள் தேவை” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ தெரிவித்துள்ளார்.

இடைக்கால (வாய்மூல) அறிக்கையில் நவநீதம்பிள்ளை எழுப்பியுள்ள பல கவலைகள் குறித்து இலங்கையில் தன்னைச் சந்தித்த போது அவர் எதுவும் கூறவில்லை என்றும் மஹிந்த ராஜபக்­ஷ கூறியுள்ளார்.
இலங்கையைச் சில நாடுகள் கொடுமைப்படுத்துகின்றன. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் 68 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ அங்கு அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“வடக்குப் பகுதியில் இராணுவத்தை நிலை நிறுத்தும் உரிமை அரசுக்குள்ளது. அந்தப் பகுதியில் உள்ள துருப்புக்கள் தொடர்பில் சில குழுக்கள் வெளியிடும் எண்ணிக்கை தான் பிரச்சினையாக உள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த வேளை, அமைச்சர்கள் சிலர் அவரது பயணம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன் வைத்திருந்தனர்.
நவநீதம்பிள்ளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­விடம் இது தொடர்பில் கவலை வெளியிட்ட போது அதற்கு ஜனாதிபதி மன்னிப்புக் கோரி இருந்தார். தற்போது நியூயோர்க்கில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­, ஜனநாயக நடைமுறையில் எவரும் எதையும் கூறும் உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
“இலங்கையைக் கொடுமைப் படுத்துவதை சில நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இது மிகச் சிறிய நாடு. ஒரு சம்பவம் நடந்தால் இலங்கை அரசின் மீது விரல்கள் நீட்டப்படுகின்றன. ஆனால், அதேபோன்ற சம்பவம் மேற்கு நாடுகளில் நடந்தால், அது கவனிக்கப்படுவதில்லை’ என்றும் அவர் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனிவாவில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த மஹிந்த, நவிப்பிள்ளை எப்போதும் தங்கள் மீது வருத்தத்துடன் இருப்பவர் என்றும் கூறியுள்ளார்.
நவநீதம்பிள்ளை தனது வாய்மூல அறிக்கையில் எழுப்பியுள்ள பல கவலைகள் குறித்து, இலங்கையில் தன்னுடன் கலந்துரையாடிய போது தெரிவிக்கவில்லை என்றும், எந்தக் கவலை குறித்த விசாரணை நடத்துவதானாலும் அதற்கு ஆதாரங்கள் தேவை என்றும் மஹிந்த மேலும் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.