வளர்ச்சியில் சாதனை படைத்த தமிழ்நாடு!

Written by vinni   // September 28, 2013   //

tamilnadu_004இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் குழு மதிப்பிட்டுள்ளது.
சமூக, பொருளாதார, நிதி ஆதாரம், தனி நபர் வருவாய் உள்ளிட்டவற்றைக் கொண்டு மாநிலங்களின் வளர்ச்சி நிலையை அறியவும் எந்த மாநிலத்துக்கு எவ்வளவு நிதியை எந்த அடிப்படையில் ஒதுக்கலாம் என்பது குறித்தும் அறிக்கை அளிக்க 6 பேர் கொண்ட வல்லுநர் குழுவை மத்திய அரசு கடந்த மே மாதம் நியமித்தது.

தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநரும் அப்போது தலைமைப் பொருளாதார ஆலோசகராக பொறுப்பு வகித்துவந்தவருமான ரகுராம் ராஜன் தலைமையிலான இக்குழுவில் ஷைபால் குப்தா, பரத் ராமசுவாமி, நஜீப் ஜங், நிரிஜா ஜி. ஜயால், துஹின் பாண்டே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழு அண்மையில் மத்திய அரசிடம் தமது அறிக்கையை அளித்தது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் மாநிலங்களின் வளர்ச்சிக்கான தேவை, செயல்பாடு அடிப்படையில் மத்திய நிதி ஒதுக்கப்படும் முறைகள் குறித்த பொதுவான யோசனையை ரகுராம் ராஜன் குழு தெரிவித்துள்ளது.

மேலும் மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய மொத்த நிதியில் 0.3 சதவீதத்தை அடிப்படை நிதியாக ஒதுக்கலாம் எனவும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தேவை, செயல்பாடு அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்கலாம் எனவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.

வளர்ச்சிக் குறியீட்டில் 0.6 மற்றும் அதற்கு அதிகமான குறியீடு மதிப்பைப் பெறும் மாநிலங்களை மிகக் குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் என கருதலாம்.

0.4 முதல் 0.6 வரை மதிப்பீடு பெறும் மாநிலங்களை குறைவான வளர்ச்சி பெற்ற மாநிலங்கள்.

0.4-க்கு கீழாக மதிப்பீடு பெறும் மாநிலங்களை அதிகளவில் வளர்ந்த மாநிலங்கள் எனக் கருதலாம். இதன் படி சிறப்பு நிதி கோரும் மாநிலங்களுக்கான தகுதி எது என்பதைக் கண்டறிய முடியும்.

அதிகளவில் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் வரிசையில் கோவா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தர்காண்ட், ஹரியானா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

வளர்ச்சி குறைந்த மாநிலங்களின் பட்டியலில் ஹிமாச்சல் பிரதேசம், சிக்கிம், கர்நாடகா, திரிபுரா, குஜராத், மிசோராம், ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, நாகலாந்து, மேற்கு வங்கம், மணிப்பூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த வரிசையில் ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மேகாலயா, அசாம், அருணாசலப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பீகார், ஒடிஷா ஆகியவை இடம்பெற்றுள்ளன.


Similar posts

Comments are closed.