400 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடும் சிறுமி

Written by vinni   // September 28, 2013   //

well_child_002தமிழ்நாட்டில் ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமியை மீட்கும் பணியில் பொலிசார், தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த புலவன்பாடி கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் பழனி(32), மலர்க்கொடி(28).  இவர்களது ஒரே மகள் தேவி(4). இவள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கிறாள். அதே கிராமத்தை சேர்ந்த சங்கரன் என்பவரது விவசாய நிலத்தில் வேர்க்கடலை பறிக்க இன்று காலை மலர்க்கொடி சென்றுள்ளார்.  பள்ளி விடுமுறை என்பதால் குழந்தை தேவியையும் தன்னுடன் அழைத்து சென்றார். சங்கரன் விவசாய நிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு தோண்டி உள்ளார்.  ஆனால், தண்ணீர் வரவில்லை. அதனால் ஆழ்துளையை மூடாமல் விட்டுள்ளார்.  இந்நிலையில் காலை 8 மணிக்கு சங்கரனின் விவசாய நிலத்தில் மலர்க்கொடி வேர்க்கடலை பிடுங்கி கொண்டிருந்தார். அங்கு விளையாடி கொண்டிருந்தாள் சிறுமி தேவி. சிறிது நேரம் கழித்து குழந்தை இல்லாததை கண்டு மலர்க்கொடி தேடியுள்ளார்.  அப்போது வேர்க்கடலை பயிர் அருகே மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுமியின் அலறல் குரலை கேட்டு மலர்க்கொடி அதிர்ச்சி அடைந்தார்.  அப்போது குழந்தை அம்மா, அம்மா என கூச்சலிட்டாள். பீதி அடைந்த மலர்க்கொடி, குழந்தையை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார்.  பக்கத்து விவசாய நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு ஓடி வந்தனர். குழந்தையை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.  அதற்குள் குழந்தையின் அலறல் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.  இதுகுறித்து களம்பூர் பொலிஸ், தீயணைப்பு துறை மற்றும் ஆம்புலன்சுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் பொலிசார் விரைந்து வந்தனர்.  பின்பு ஆரணி, களம்பூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். மேலும் 108 அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு சிறுமிக்கு ஆக்சிஜன் செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த ஆரணி தாசில்தார் அனுஷா மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து போர்வெல் அருகே ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சிறுமியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தொடர்ந்து சிறுமியிடம், தாய் மற்றும் உறவினர்கள் அவ்வப்போது தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் சில நேரங்கள் மட்டுமே சிறுமி பேசுகிறாள்.  மற்ற நேரங்களில் எந்த குரலும் வராததால் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கதறியபடி உள்ளனர். காலை 10 மணி வரை முதல் தீயணைப்பு துறை, பொலிசார் மற்றும் கிராம மக்கள் குழந்தையை உயிரோடு மீட்க போராடி வருகின்றனர்.  மேலும் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். அவ்வப்போது கயிறு மூலம் ஆழ்துளை கிணற்றுக்குள் பிஸ்கெட், தண்ணீர் கொடுத்து வருகின்றனர்.


Similar posts

Comments are closed.