பொம்மை துப்பாக்கி மூலம் கொள்ளையடித்த மாணவன்

Written by vinni   // September 26, 2013   //

gunபிரிட்டனை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவன் போலி துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த மாணவன் நார்த்வெஸ்ட் பகுதியிலுள்ள பிரபல தனியார் வங்கிக்கு பள்ளிச் சீருடையுடன் முகமூடி அணிந்து சென்றுள்ளான். போலி துப்பாக்கியை காட்டி வங்கி காசாளரை மிரட்டியுள்ளான்.

சிறையிலிருந்து தப்பி வந்துள்ளதாகவும், சத்தம் போடாமல் பணத்தை தருமாறும் கூறினான். சிறுவன் வைத்திருப்பது போலி துப்பாக்கி என்பதை அறிந்த காசாளர், இரண்டு லட்சம் ரூபாய் போலி பணத்தை அவனிடம் கொடுத்தார்.

கொள்ளையடித்த மாணவனும், பணத்துடன் தப்பிச் சென்று விட்டான். இது குறித்து மாணவனின் தாய்க்கு தகவல் தரப்பட்டது. மாணவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவனது அறைக்குள் சென்ற தாய், பணம் மற்றும் போலி துப்பாக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த பொலிஸார் மாணவனை விசாரித்ததில், அவன் வங்கியில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டான்.

தான் விரும்பிய பொருட்களை வாங்க, பணம் தேவைப்பட்டதால் கொள்ளையன் வேடமிட்டு இட்டு, வங்கியில் பணம் கொள்ளையடித்ததாக அவன் கூறினான்.

பொலிஸார் அவனை கைது செய்து நீதிமன்றில் ஒப்படைத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவன் வீடியோ கேம்களில் வரும் விளையாட்டு காட்சிகளை பார்த்து அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.

மாணவனுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை அடுத்த மாதம், 15ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

கொள்ளையில் ஈடுபட்ட மாணவன், பள்ளியில் சிறந்த மாணவன் என்ற விருதை பெற்றுள்ளான். ஒழுக்கத்திலும், மதிப்பெண் பெறுவதிலும் முதலிடம் பிடித்த மாணவன், இவ்வகை செயல்களில் ஈடுபட்டுள்ளது, ஆசிரியர் மற்றும் பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


Similar posts

Comments are closed.