மோடியை சந்திக்கிறார் ரஜினி?

Written by vinni   // September 26, 2013   //

rajinikanth_narendramodi_002பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை இன்று நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இன்று மாலை திருச்சியில் நடைபெறும் இளந்தாமரை மாநாட்டில் உரையாற்றுகிறார்.

இம்மாநாட்டுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாஜகவின் இந்த இளைஞரணி மாநாட்டில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நரேந்திர மோடியின் நண்பரான நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவை அண்மைக்காலமாக வெளிப்படையாக பாஜக கோரி வருகிறது.

இந்நிலையில் திருச்சி வரும் நரேந்திர மோடியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருச்சியில் நரேந்திர மோடி இன்று இரவு 7 மணிக்கு பாஜக பிரமுகர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இது ரத்து செய்யப்பட்டுள்ளது. அனேகமாக ரஜினிகாந்த் சந்திப்புக்காகத்தான் பாஜக பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே திருச்சியில் ரஜினி ரசிகர்கள், நரேந்திர மோடியை வரவேற்று பேனர்கள் வைத்திருக்கின்றனர்.

இதற்கு முன்பு ஹைதராபாத்தில் ரஜினிகாந்த் நண்பரான மோகன்பாபு, நரேந்திர மோடியை சந்தித்திருந்தார்.

அதேபோல் ரஜினியின் மற்றொரு நண்பரான நடிகரும் பத்திரிகையாளருமான சோவும் லோக்சபா தேர்தலில் பாஜகவை ரஜினிகாந்த் ஆதரிக்க வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனால் நரேந்திர மோடியை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Similar posts

Comments are closed.