நேர்மையான நகரம்: இரண்டாமிடத்தில் மும்பை

Written by vinni   // September 26, 2013   //

Beautiful-City-725780ஊழல் குறித்த கணக்கீடுகள் வெளியிடப்படும்போது இந்தியா பெரும்பாலும் முன்னிலை இடங்களில் இருக்கும் இக்கட்டான நிலைமை ஏற்படும்.
ஆனால், சமீபத்தில் நகரங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் மும்பை வித்தியாசமான முடிவைக் காண்பித்தது.

உலக நாடுகளின் முக்கிய நகரங்கள் 16 தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு தெருவில் கைவிடப்படும் பணப்பைகளில் எத்தனை திருப்பி ஒப்படைக்கப்படுகின்றன என்ற சோதனை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.

ரூ.3,000, செல்போன் நம்பர், வர்த்தக அட்டைகள், குடும்ப போட்டோ போன்றவை அடங்கிய சிறிய பணப்பைகள் வணிக வளாகங்கள், நடைபாதைகள், பூங்காக்கள் போன்ற இடங்களில் விடப்பட்டன. மற்ற நாடுகளில் இந்தப் பணத்திற்கு ஈடான தொகை அமெரிக்க டாலராகவோ, அந்தந்த நாட்டு பணமாகவோ வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நகரத்திலும் 12 பைகள் வீதம் மொத்தம் 192 பைகள் இதுபோல் கீழே விடப்பட்டன.

கைவிடப்பட்ட பைகளில் 47 சதவிகிதம் பைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கியில் 12ல் 11 திரும்ப ஒப்படைக்கப்பட்டு அந்த நகரம் நேர்மையான மக்களுக்கான முதலிடத்தைப் பெற்றது.

அடுத்து மும்பையில் 9 பைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தது. புடாபெஸ்ட் மற்றும் நியுயார்க் நகரங்களில் 8 பைகள் திரும்பக் கிடைத்தன.

ஆம்ஸ்டர்டாம் மற்றும் லண்டனில் ஏழும், பெர்லினில் ஆறும், வார்சாவில் ஐந்தும், சூரிச்சில் நான்கும், புகாரெஸ்ட் மற்றும் ரியோ டி ஜெனிரோவில் மூன்றும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. கனடாவின் மாட்ரிட் நகரில் இரண்டு பைகள்தான் திரும்பக் கிடைத்தன. அதுபோல் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் ஒரு பை மட்டுமே திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அதுவும் நெதர்லாந்திலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த தம்பதியர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் நேர்மையான நகரங்கள் என்ற குறியீட்டைப் பெற்றிருந்த சூரிச், லண்டன் போன்ற நகரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மும்பை இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகக் கருதப்படுகின்றது.


Similar posts

Comments are closed.