ஹுன் சென் பிரதமர் பதவியைத் தொடர கம்போடிய பாராளுமன்றம் அனுமதி

Written by vinni   // September 25, 2013   //

hun-sen_2469368bகம்போடிய நாட்டில் ஜூலை மாதம் நடந்த தேர்தலில் ஆளும் கட்சியான கம்போடியா மக்கள் கட்சி 68 இடங்களையும், சாம் ரெய்ன்ஸி தலைமையிலான நேஷனல் ரெஸ்க்யு கட்சி 55 இடங்களையும் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 1985 ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் பதவியில் இருக்கும் கம்போடியா மக்கள் கட்சித் தலைவர் ஹுன் சென் மீண்டும் ஐந்து வருடங்களுக்கு பிரதமர் பதவியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியபோதும் இது குறித்த விசாரணையை ஆளும் கட்சி மறுத்துவிட்டது. தொடர்ந்து பல வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்றபோதும் கம்போடிய பாராளுமன்றம் ஹுன் சென் பிரதமர் பதவியைத் தொடர அனுமதி அளித்துள்ளது. சென்ற வார இறுதியில் அன்கோர்வாட்டில் உள்ள கோவில் வளாகத்தில் கூடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் குறித்த விசாரணை நடைபெறும்வரை பாராளுமன்றத்திற்கு செல்லுவதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளனர்.

தேர்தல் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஹுன் சென், எதிர்க்கட்சியுடனான பேச்சு வார்த்தைக்கான கதவு இன்னும் மூடப்படவில்லை, ஆனால் அவர்கள் தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ளவேண்டும், பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். ஹுன் சென் பதவியேற்கும் இன்று, தலைநகர் பினாம்பென்னிலும், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இருக்கும் என்று எதிர்க்கட்சி தகவல் தெரிவித்துள்ளது.

தேர்தல் கமிஷன் உட்பட, அனைத்து மாநில நிறுவனங்களும் பிரதமர் ஹுன் சென்னின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது எதிர்க்கட்சியினர் தங்கள் எதிர்ப்புகளை போராட்டங்கள் மூலம் மட்டுமே தெரிவிக்க முடியும் என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. 61 வயதாகும் ஹுன் சென் தனது 70 ஆவது வயது வரை பிரதமர் பதவியில் இருப்பேன் என்று சபதமிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.