சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வாலிபர் கைது : ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி செல்ல முயற்சி

Written by vinni   // September 25, 2013   //

4Arrest_iStockphotoமலேசியாவிற்கு பால்பவுடரில் மறைத்து வைத்து ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி செல்ல முயன்ற வாலிபரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை மலேசியாவிற்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் பாதுகாப்பு சோதனைக்கு வந்தனர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை போட்டனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த பரகத்அலி (வயது 29) என்பவர் சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு செல்ல வந்திருந்தார். அவரது உடமைகளை சோதனை போட்டபோது, அதில் 10 பால் பவுடர் டின்கள் இருந்தன. அதிக பால் பவுடர் டின்களை ஏன் கொண்டு செல்கிறீர்கள்? என்று பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டனர்.

அதற்கு இது விலை உயர்ந்த பால் பவுடர். மலேசியாவில் கிடைக்காது என்பதால் அங்குள்ள உறவினர்கள். நண்பர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பால்பவுடர்களை பிரித்து சோதனை போட்டனர். அப்போது, அதில் கேட்டமைன் போதைப்பொருள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரூ.2 கோடி மதிப்புள்ள 20 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து பரகத்அலியின் விமான பயணத்தை ரத்து செய்த பாதுகாப்பு அதிகாரிகள் சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்.

போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் வந்து 20 கிலோ கேட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றினர். மேலும், அதை கடத்த முயன்ற பரகத்அலியையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.


Similar posts

Comments are closed.