எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு தடை

Written by vinni   // September 24, 2013   //

court-order1எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை சேர்ந்த முகமது மொர்சி மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி கடந்த ஜூலை மாதம் அவரது ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது.அப்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மொர்சியின் ஆதரவாளர்களும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்களும் மீண்டும் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கலைக்க முயன்ற ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

85 வருட காலமாக இயக்கி வரும் இந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை, முன்பு 1954-ம் ஆண்டு ராணுவ அரசு தடை செய்தது. இருந்தும் அவர்கள் அந்த இயக்கத்தை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகவும் பின்னர் அதில் ஒரு பிரிவினர் அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவு செய்துகொண்டனர்.

இந்நிலையில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தொடர்பான வழக்கு ஒன்றில் கெய்ரோ நீதிமன்றம் அந்த இயக்கத்தை தடை செய்து நேற்று தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து கெய்ரோ நீதிமன்றம் கூறியதாவது,

அரசு சாராத அமைப்பான இந்த இஸ்லாமிய இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்கிறோம். அதிலிருந்து வந்த மற்ற இயக்கத்தையும் தடை செய்கிறோம். மேலும் இந்த இயக்கத்தின் மேல் முறையீடு வருகிறவரை அதன் சொத்துக்களை அரசு நிர்வாகம் பறிமுதல் செய்யவேண்டும். அந்த சொத்தை நிர்வகிக்க ஒரு குழுவை அரசு நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Similar posts

Comments are closed.