இராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே வடக்கு தேர்தல் நடந்தது!

Written by vinni   // September 24, 2013   //

commenகடந்தவாரம் நடந்து முடிந்த இலங்கையின் வடமாகாணத் தேர்தலில் பல்வேறு வகையாக இலங்கை ராணுவத்தின் அச்சுறுத்தல்கள் இருந்ததாக, பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள்.

இந்த தேர்தலில், இலங்கை ராணுவம் பல்வேறு வகையான மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், ஆளும் கட்சியானது, அரச நிர்வாக கட்டமைப்பை பல்வேறு வகையில் தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொதுநலவாய நாடுகளின் சார்பிலான கண்காணிப்புக்குழுவுக்கு தலைமை தாங்கி வந்திருக்கும் கென்யாவின் முன்னாள் துணை ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இலங்கை ராணுவம் மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொதுநலவாய நாடுகளின் சார்பிலான கண்காணிப்புக்குழுவே தெரிவித்திருப்பது, இலங்கை ராணுவத்தின் மீதான விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு பொதுநலவாய நாடுகளின் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதில் உறுதியாக இருக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அதேசமயம், தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டவிதம் குறித்தும், இலங்கையின் தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த செயற்பாடுகள் குறித்தும் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்புக்குழுவினர் பாராட்டை தெரிவித்திருக்கிறார்கள்.

பல்வேறுவிதமான அச்சுறுத்தல்களையும் புறந்தள்ளிவிட்டு பெரும்பான்மையான வாக்காளர்கள் பெருமளவில் தைரியமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்கள் என்பதே பொதுநலவாய குழுவின் கருத்தாக இருக்கிறது.

முன்னதாக, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், இலங்கையின் மாகாணசபைத் தேர்தல்களை கண்காணித்த சார்க் நாடுகளின் கண்காணிப்பாளர்களின் குழுவின் தலைவருமான கோபாலசுவாமி, வடமாகாணத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டின் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலில் இலங்கை ராணுவத்தினர் தான் ஈடுபட்டனர் என்பதை தாம் “101” சதவீதம் உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் அனந்தியின் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை நேரில் காணவந்த தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வ தொண்டு அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும் தாக்கப்பட்டார்.

இலங்கை ராணுவத்தினர் வாக்காளர்களை சட்டவிரோதமாக வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்ததாகவும் கோபாலசுவாமி குற்றம் சாட்டினார்.


Similar posts

Comments are closed.