திருமலைக்கு பஸ்கள் ஓடாததால் 50 ஆயிரம் பக்தர்கள் தவிப்பு

Written by vinni   // September 24, 2013   //

thirupathi2ஆந்திராவை இரண்டாக பிரித்து தனிதெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா பகுதியில் கடந்த 54 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.ஆந்திர அரசு ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பதியில் இன்று முழு அடைப்பு நடத்தபடும் என்று போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

திருமலைக்கு எந்த வாகனங்களையும் இயக்க அனுமதிக்கமாட்டோம் என்று அறிவித்தனர். இதனால் பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். போராட்ட குழு அறிவித்தபடி திருப்பதி திருமலையில் இன்று முழு அடைப்பு நடந்தது. கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. திருப்பதியில் இருந்து திருமலைக்கு பஸ்கள் இயக்கபடவில்லை.

மோட்டார் சைக்கிள், கார்கள் உள்பட எந்த வாகனமும் ஓடவில்லை. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருமலைக்கு நேற்று தரிசனத்திற்கு வந்த 50 ஆயிரம் பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவிக்கிறார்கள். தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு வேண்டிய உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.

குழந்தைகளுடன் வந்த சிலர் பெரிதும் அவதிப்பட்டனர். திருமலைக்கு பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் திருப்பதி பஸ்நிலையத்தில் காத்திருக்கின்றனர். திருப்பதியில் எந்த வாகனமும் ஓடாததால் நகரம் வெறிச்சோடியது. திருமலையில் கடைகள், ஓட்டல்களை வருகிற 30-ந் தேதி வரை திறக்க வேண்டாம் என்று போராட்ட குழுவினர் கேட்டு கொண்டுள்ளனர்.


Similar posts

Comments are closed.