அபிவிருத்தியை விட‌ தமிழ் மக்கள் அசியல் சுதந்திரத்தையே கோருகின்றனர் – க்ளோபல் தமிழ் போராம்

Written by vinni   // September 23, 2013   //

global tamil forumதமிழ் மக்கள் அசியல் சுதந்திரத்தையே கோரி நிற்பதாக க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இதனை பறைசாற்றி நிற்பதாக க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் படையினரின் நெருக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளினால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மெய்யான அரசியல் சுதந்திரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அதன் வெளிப்பாடாக வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை கருத முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெறுமனே உட்கட்டுமான அபிவிருத்தியும், புனரமைப்புப் பணிகளும் மட்டுமே தமிழ் மக்களின் அபிலாஷை அல்ல என்பதனை இப்போதாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பிரதிநதிகளும் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். எமது மக்கள் அரசியல் தீர்வுத் திட்டமொன்றையே வேண்டி நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.

தங்களது விஞ்ஞாபனத்தை ஏற்றுக் கொண்டு தெற்கு மக்கள் வாக்களித்தார்கள் என ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் கருதினால், வடக்கு மக்கள் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தை ஏற்றுக் கொண்டு வாக்காளித்தார்கள் என்பதனையும் ஒப்புக் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.


Similar posts

Comments are closed.