இலங்கை தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை உடனடியாக வாபஸ் பெற விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

Written by vinni   // September 23, 2013   //

vikneswaranஇலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி அமோக வெற்றி பெற்றதை வரவேற்று, அந்த கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

“தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் பேசி இருக்கிறார்கள். எங்கள் வெற்றியில் இருந்து இலங்கை அரசு பாடம் படித்துக்கொள்ள வேண்டும். தமிழர்கள், தங்களுக்கு தன்னாட்சி உரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தி, அபரிமிதமாக வாக்களித்து வெற்றி தேடித்தந்து உள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் ராணுவம் குவிக்கப்பட்டு இருப்பதுதான் தற்போதைய அடிப்படை பிரச்சினையாகும். ராணுவம் முழுவதையும் உடனடியாக வாபஸ் பெற்று தங்கள் முகாமுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். ஒன்றுபட்ட இலங்கையில், கூட்டாட்சியின் கீழ் தன்னாட்சி அமைக்கவே நாங்கள் விரும்புகிறோம்”.

இவ்வாறு விக்னேஸ்வரன் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களில் ஒருவரான சுமந்திரன், “நாங்கள் கேட்டுக்கொண்டபடி, தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களித்து, தங்கள் அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்து இருப்பதாக” கூறினார்.

மற்றொரு மூத்த தலைவரான சுரேஷ் பிரேம சந்திரன், “பிரிவினை அல்லாத அரசியல் தீர்வை விரும்புவதாக வடக்கு மாகாண மக்கள் தெளிவாக உணர்த்தி இருப்பதாக” தெரிவித்தார்.

இலங்கையின் மூத்த மந்திரியும், அரசு செய்தி தொடர்பாளருமான கெகிலிய ரம்புகுவெல்லா, “தமிழ் தேசிய கூட்டணிக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்தின் பிரதிபலிப்பு” என்று கருத்து தெரிவித்தார்.

தமிழர்கள் ஆதிக்கம் நிறைந்த வடக்கு மாகாண கவுன்சிலுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரம் வழங்கப்படுமா? என்று கேட்டதற்கு, “தற்போதைய அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்ட மாற்றங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்” என்று, அவர் பதில் அளித்தார்.


Similar posts

Comments are closed.