மக்களின் ஆணையை மஹிந்த மதிக்க வேண்டும்

Written by vinni   // September 23, 2013   //

r.sampanthanவடமாகாண ஆட்சிப் பொறுப்பை கையேற்று இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் புதிதாக எதையும் கேட்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ இந்தியா உட்பட உலக நாடுகளுக்கும் எமக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

13 ஆவது அரசியல் திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கும் அப்பால் சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றை வழங்குவேன் என்று அவர் சொல்லியிருந்தார்.
அதன் சாராம்சத்தை உள்ளடக்கியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது. எமது மக்கள் அதனை அங்கீகரித்து எமக்கு ஆணை வழங்கியுள்ளனர்.
இறைமையுள்ள ஓர் அரசின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
நேற்று மாலை யாழ். ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சி. நாங்கள் எங்களுடைய கொள்கை விளக்கங்களைக் கூறுவோம்.
மாகாண சபை நிர்வாகத்தில் தலையிட மாட்டோம். சுதந்திரமாக அது இயங்க வேண்டும். அதிகாரங்கள் குறைவாகக் காணப்பட்டாலும் மாகாண ஆட்சி முறைமை வந்த பின் அரசும் மக்களின் ஆணையை மதிக்க வேண்டும்.
அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்பனவற்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படியும் சர்வதேச அழுத்தங்களினாலும் வடமாகாண சபை உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே ஆரம்ப கட்டமாக எமது மாகாணசபைக்கு உள்ள அதிகாரங்களின் படி வழங்கப்பட வேண்டிய விடயங்களை எமது மத்திய அரசுடன் பேசி அதைப் பெற முயற்சிகள் மேற் கொள்ளப்படும். அதை வழங்க வேண்டியது அரசின் கடமை.
நாம் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்து கொள்ள ஒரு போது மறுக்கவில்லை. தெரிவுக் குழுவுக்கு செல்லும்முன் எமது பிரச்சினைக்கு எந்த வகையிலான தீர்வைக் காணப் போகிறார்கள்?
ஏற்கனவே எங்களுடைய தீர்வுத் திட்டம் தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளோம். எமது ஆலோசனைகள் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? அரசு முன்வைக்கும் தீர்வுத் திட்டம் என்ன? என்பதை அறிவிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பேச முடியும் வெறுங் கையுடன் போய் எதைப் பேசுவது அரசு அதன் தீர்வுத் திட்டத்தை முன் வைத்தால் அதனை பரிசீலனை செய்து நாடாளுமன் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள தயார்.
வடமாகாணத் தேர்தலை எப்படியாவது தடுத்து நிறுத்தி விடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல இராணுவ அத்துமீறல்கள், அடாவடித் தனங்கள் தாக்குதல்கள் எனப் பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. அத்தனை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தான் மக்கள் வாக்களித்தனர்.
அச்சுறுத்தல்கள் இல்லை என்றால் நாம் நூறுவீதமான வெற்றியைப் பெற்றிருப்போம். முன்பு போர் நிலவிய போது இங்கு இராணுவம் தேவைப் பட்டது. இப்போது போர் முடிந்து விட்டது.
இராணுவம் அவசியமில்லை. தேவைக்கு அதிக மாகவுள்ள இராணுவம் அகற்றப் படவேண்டும் பின்னர் படிப்படியாக ஏனைய இராணுவத்தை அகற்ற அழுத்தம் கொடுப்போம். இதைத்தானே நல்லிணக்க ஆணைக்குழுவும் பரிந்துரை செய்துள்ளது.
தமிழ் நாட்டில் ஈழத் தமிழர் விடயம் தொடர்பாக காட்டப்பட்ட ஆதரவும், அக்கறையும் எங்களுக்கும் பெரிதும் உதவியுள்ளன. ஆனால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்று பட்டு ஒரே குரலில் ஒரே தீர்மானமாக அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். அதுவே எங்களுக்கு நன்மை பயக்கும் என்றார்.


Similar posts

Comments are closed.