செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் இந்தியா

Written by vinni   // September 23, 2013   //

marsசெவ்வாய்க் கிரகத்துக்கு அக்டோபர் 28-ஆம் தேதி விண்கலம் அனுப்ப தேசிய நிபுணர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) வட்டாரங்கள் தெரிவித்தன.
செவ்வாய்க் கிரகத்துக்கு ஆராய்ச்சி விண்கலம் அனுப்பும் திட்டத்தை நிறைவேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரப் பணியாற்றி வருகிறது.

1,350 கிலோ எடை கொண்ட செவ்வாய் வட்ட சுற்றி (மார்ஸ் ஆர்பிடர்) விண்கலத்தை தயாரித்துள்ள இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி.-சி25 ராக்கெட் உதவியுடன் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இந்த விண்கலத்தில் 15 கிலோ எடை கொண்ட 5 ஆராய்ச்சிக் கருவிகள் இடம்பெற்றிருக்கும். செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கானச் சான்றுகள், சுற்றுச்சூழல், பரப்பு, தட்பவெப்பம் ஆகியவற்றைப் படம் பிடிப்பதே இந்த விண்கலத்தின் முக்கிய நோக்கமாகும்.
உயிருக்கு ஆதாரமாக விளங்கும் மீத்தேன் வாயு செவ்வாய்க் கிரகத்தில் இருப்பதைக் கண்டறிவதும் விண்கலத்தின் முக்கிய ஆய்வு நோக்கமாகும்.

ரூ.450 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் குறித்து ஆய்வு நடத்துவதற்காக இஸ்ரோ முன்னாள் தலைவர் யூ.ஆர்.ராவ், விண்வெளி அறிஞர் ரோத்தம் நரசிம்மா உள்ளிட்டோர் அடங்கிய தேசிய நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

கடந்த 19, 20-ஆம் தேதிகளில் இந்தக் குழுவினர், செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்படும் விண்கலத் திட்டத்தை முழுமையாக ஆய்வுக்கு உள்படுத்தினர்.

திட்டத்தை முழுமையாக ஆராய்ந்த நிபுணர் குழுவினர், அக்டோபர் 28-ஆம் தேதி விண்கலத்தை விண்ணில் செலுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

தட்பவெப்ப நிலை சாதகமாக அமைந்தால், அக்டோபர் 28-ஆம் தேதி விண்கலத்தை விண்ணில் செலுத்துவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெங்களூர் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் வைக்கப்பட்டுள்ள விண்கலம், முழுமையானச் சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.

வருகிற 26-ஆம் தேதிக்கு முன்னதாக இந்த விண்கலத்தை ஆய்வுக் குழுவினர் சோதித்து அனுமதி அளித்ததும், செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று விண்கலத்தை ஏவுதளம் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்ல இஸ்ரோ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

விண்வெளியில் 10 மாதங்கள் பயணம் செய்த பிறகு, 2014, செப்டம்பரில் செவ்வாய்க் கிரக சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நிலை கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.