24 அங்குல ரத்த உறைவை அகற்றி மருத்துவர்கள் அமெரிக்காவில் சாதனை

Written by vinni   // September 22, 2013   //

heart_surgery_002அமெரிக்காவில் நோயாளி ஒருவரின், ரத்தக் குழாயில் 24 அங்குலத்திற்கு உறைந்திருந்த ரத்தத்தை, நவீன சிகிச்சை மூலம் வெளியேற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின், கலிபோர்னியாவை சேர்ந்தவர், டோட் டுன்லாப், 62.

கடந்த மாதம், இங்கு உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்பட்டது. மேலும் இதயத்திலும் கோளாறு இருப்பதாக தான் உணர்வதாக டாக்டர்களிடம் அவர் கூறினார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிடி ஸ்கேன் செய்ய அறிவுறுத்தினர். சிடி ஸ்கேன் செய்ததில், டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டுன்லாப்பின் கால் மற்றும் இதயத்திற்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரத்த நாளத்தில், 24 அங்குலத்துக்கு ரத்தம் உறைந்து இறுகிப் போயிருந்தது. இதை, “ஓபன் ஹார்ட் சர்ஜரி’ மூலம் சரி செய்வதில் சிக்கல் ஏற்படலாம் என, எண்ணிய டாக்டர்கள், “ஆன்ஜியோ வேக்’ என்ற உறிஞ்சும் சிகிச்சை மூலம் சரி செய்ய முற்பட்டனர்.

டாக்டர்களின் அறிவுரையை, டுன்லாப்பும் ஏற்றுக் கொண்டதால், அவருக்கு, “ஆன்ஜியோ வேக்’ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வயிறுக்கும், தொடைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு பைப் செருகப்பட்டது. மற்றொரு பைப், கழுத்து பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் இணைக்கப்பட்டது.

நவீன உபகரணத்தின் மூலம், வெற்றிடத்தை ஏற்படுத்தி, ரத்த உறைவை உறிஞ்சி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்த உறைவு வெளியேற்றப்பட்டது.

உடனடியாக, புது ரத்தம் அந்த பகுதியில் செலுத்தப்பட்டது. மூன்று மணி நேரத்தில் இந்த சிகிச்சை முடிந்தது. இந்த சிகிச்சையில், டுன்லாபின் ரத்த ஓட்டம் சீரடைந்து, இதயம் சரியான முறையில் செயல்படத் துவங்கியுள்ளது.

ஆக்சிஜன் சரியான அளவில் அனைத்து பாகங்களுக்கும் செலுத்தப்படுகிறது. மூச்சு திணறல் பாதிப்பும் மறைந்து விட்டது.

மருத்துவமனையில், மூன்று நாட்கள், மருத்துவரின் கண்காணிப்பில், டுன்லாப் இருந்தார். நான்காவது நாள், வீட்டிற்கு சென்று சர்வ சாதாரணமாக எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டார் டுன்லாப். ஆபத்தான சிகிச்சையாக இருந்தாலும், டாக்டர்களின் சிறப்பான செயல்பாடுகளால், டுன்லாப் குணமடைந்து உள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.